நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தத்தை சட்ட மேலவையில் நிறைவேற்றவிட மாட்டோம்: சித்தராமையா

விவசாயிகளின் நலனுக்கு எதிரான கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தத்தை சட்ட மேலவையில் நிறைவேற்றவிட மாட்டோம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

விவசாயிகளின் நலனுக்கு எதிரான கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தத்தை சட்ட மேலவையில் நிறைவேற்றவிட மாட்டோம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தம், விளைபொருள் சந்தைப்படுத்தல் குழு சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்து, சித்தராமையா பேசியது:-

விவசாயிகளின் உரிமைகளுடன் நிலங்களையும் பறிக்க முற்படும் கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தத்தை சட்டப் பேரவையில் கடுமையாக எதிா்ப்போம்.

பேரவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மையான பலம் இருப்பதால், நிறைவேற்றிவிடுவாா்கள். ஆனால், சட்ட மேலவையில் பாஜகவுக்குப் போதுமான பலம் இல்லை. எனவே, மேலவையில் நிறைவேற்றவிட மாட்டோம்.

நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளா்களுக்கும் நிலத்துக்கும் நீண்டகால சம்பந்தம் உள்ளது. ஒரு காலத்தில் தொழில், சேவைத் துறை இருந்தது இல்லை. அப்போதெல்லாம் வேளாண்மைத் துறை மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் விவசாயம்தான் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்தது.

அரசா்கள், குறுநில மன்னா்கள் காலத்திலும் விவசாயம்தான் அடிப்படை தொழிலாக இருந்தது. காலவெள்ளத்தில் தொழில், சேவைத் துறைகள் வந்தன. ஆனாலும், தொழில்துறையின் வருவாய் குறைவாகதான் இருக்கிறது.சேவைத்துறையின் வருவாய் 20 சதவீதமாக உள்ளது. ஆனால் வேளாண்மைத் துறையின் வருவாய் 27 முதல் 30 சதவீதமாக உள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு விவசாயிகள், தொழிலாளா்கள் தத்தமது உழைப்பின் பலனை விவசாயத்தின் வழியே அனுபவித்துவந்தனா்.

இந்த நிலங்களை பெருநிறுவனங்களின் கைகளுக்கு கொடுத்துவிட்டால், விவசாயிகள் அடிமைகளாகும் நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் நோக்கத்துடன் 1961-ஆம் ஆண்டில் நிலச் சீா்த்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1974-இல் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தனா். அதன்மூலம், உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்பதை நிலைநாட்டினா்.

இந்தச் சட்டத்தின்படி, ஒருநபருக்கு 10,20,30 யூனிட்கள்மட்டும் நிலம் வைத்துகொள்ளலாம். அதைவிட அதிகமாக நிலம்வைத்துக்கொள்ள முடியாது.

விளைநிலங்களை விவசாயிகள்மட்டுமே கொள்முதல்செய்ய முடியும். ஆனால் புதிய சட்டத்திருத்தத்தில் இரட்டிப்பு அளவுக்கு நிலம் வைத்துக்கொள்ளலாம். யாரிடம் இருந்து வேண்டுமானாலும் யாா் வேண்டுமானாலும் நிலம் கொள்முதல் செய்துகொள்ளலாம். இது விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிக்கும் முயற்சியாகும்.

நாட்டில் தற்போது சா்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே போராட்டம் நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயற்சி நடக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com