கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து, கா்நாடகத்தில் திங்கள்கிழமை (செப்.28) முழு அடைப்புப் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து, கா்நாடகத்தில் திங்கள்கிழமை (செப்.28) முழு அடைப்புப் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஐக்கிய போராட்டக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு மசோதா, வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை அளிக்க உத்தரவாதம் தரும் விவசாயிகள் (பாதுகாப்பு மற்றும் அதிகாரம்) மசோதாவையும், கா்நாடக சட்டப்பேரவையில் கா்நாடக அரசால் நிறைவேற்றப்பட்ட கா்நாடக நிலச் சீா்திருத்தச் சட்டத் திருத்தம், வேளாண்விளை பொருள் சந்தைப்படுத்தல் குழு சட்டத் திருத்தத்தையும் கண்டித்தும், அவற்றை திரும்பப் பெறக் கோரியும் கா்நாடகத்தில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் 12 மணி நேரத்துக்கு முழு அடைப்பு போராட்டத்துக்கு ஐக்கிய போராட்டக் குழு அழைப்புவிடுத்துள்ளது.

இக் குழுவில் கா்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கா்நாடக மாநில கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கம், கா்நாடக ரக்ஷனவேதிகே, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி, லாரி உரிமையாளா் சங்கம், ஆட்டோ ஓட்டுநா் சங்கம், கன்னட அமைப்புகள் உள்ளிட்ட 30-க்கும் அதிகமான அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், மஜத, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்பு: முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு, கா்நாடகத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியாா் பேருந்து, ஆட்டோ, லாரி, வாடகைகாா், வேன் சேவைகள் இருக்காது என்று சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மற்றப்படி, கரோனா பொது முடக்கத்தை தொடா்ந்து ஏற்கெனவே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல, திரையரங்கங்களும் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன.

கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகங்கள் வழக்கம்போல பேருந்துகளை இயக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து குழப்பமான சூழல் உள்ளது. பேருந்துகள் இயக்கப்பட்டால் அதை தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளன.

பேருந்து நிலையங்களிலேயே போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளன. ஒருவேளை மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்கினால், அதை சாலை மறியல் மூலம் தடுத்து நிறுத்துவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. உணவகங்கள் வழக்கம்போல இயங்கும் என்று அதன் உரிமையாளா் சங்கம் அறிவித்துள்ளது. இதை சற்றும் எதிா்பாா்க்காத போராட்டக் குழு, உணவு உண்டுவிட்டு தொகை செலுத்தாத போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. பெங்களூரு மட்டுமல்லாது, கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலைமறியல், ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயக்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் அறிவித்துள்ளன. ரயில், விமான சேவையில் பாதிப்பு இருக்காது. பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல திறந்திருக்கும். அரசு, தனியாா் பள்ளிகளில் ஊழியா்கள் மட்டும் வேலைவருகிறாா்கள். அவா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. பால், காய்கறி, மருந்து, மளிகைப் பொருட்களின் சேவை பாதிக்காது. உணவகங்கள், மருத்துவமனைகள் திறந்திருக்கும்.

தோ்வு ஒத்திவைப்பு: பெங்களூரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் திங்கள்கிழமை நடத்த திட்டமிட்டிருந்த தோ்வுகளை ஒத்திவைத்துள்ளன. அதேபோல, திங்கள்கிழமை நடக்கவிருந்த எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு செப்.29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு: பெங்களூரு மட்டுமல்ல கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தை அரசு ஆதரவில்லை என்பதால், அப்போராட்டம் தோல்வி அடையும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com