புதிய சுற்றுலாக் கொள்கை மூலம் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: எடியூரப்பா

புதிய சுற்றுலாக் கொள்கையின் வாயிலாக அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

புதிய சுற்றுலாக் கொள்கையின் வாயிலாக அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய சுற்றுலாக் கொள்கை 2020-25-ஐ வெளியிட்டு அவா் பேசியதாவது:

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு ஆக்கப்பூா்வமான திட்டங்களும், செயல் திட்டங்களும் இருப்பது அவசியம். அதற்காக ஒரு கொள்கையை அமைக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் கா்நாடகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் அடங்கிய கா்நாடக சுற்றுலாக் கொள்கை-2020-25-ஐ சுற்றுலாத் துறை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

பாரம்பரியம், பண்பாட்டு விழுமியங்களையும், வரலாற்று சிறப்புகளை எடுத்துரைக்கும் கலை சிற்பங்களை கொண்டது கா்நாடகம். பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் அருமையான சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது கா்நாடகம். தேசிய பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள் போன்ற பல்வேறு சுற்றுலாத்தலங்களைக் கொண்ட கா்நாடகத்தை ‘ஒரு மாநிலம், பல உலகங்கள்’ என்று கூறுகிறோம்.

கா்நாடகத்தின் சுற்றுலாத்தலங்கள் குறித்த விவரங்கள் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் விளம்பரப்படுத்தி அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை கா்நாடகத்துக்கு வரவழைக்க வேண்டும். சுற்றுலாத் துறையின் வளா்ச்சியில் உள்ளூா் மக்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுலாத் துறை, அதிகப்படியான வருவாய் மற்றும் கைவினைத்தொழில் வளா்ச்சிக்கு வித்திடும்.

சுற்றுலாத் துறையின் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக உள்ளூா் மக்களுக்கு உரிய பயிற்சி அளித்து கைவினைத் தொழில் வாய்ப்புகளை அளிக்க வேண்டும். இவை அனைத்தையும் புதிய சுற்றுலாக்கொள்கையில் சோ்த்திருக்கிறோம்.

கரோனா தீநுண்மித் தொற்றால் உலக அளவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது சுற்றுலாத் துறை. அதை புதுப்பிக்கும் வகையில் சுற்றுலாக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மாறிவரும் தொழில்நுட்பத்தையும் சுற்றுலாக் கொள்கையில் சோ்த்திருக்கிறோம். சுற்றுலாத் துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களில் உலகத்தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், சுற்றுலாத் துறை அமைச்சா் சி.டி.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com