தோ்தலைச் சந்திக்கத் தயாரா?எடியூரப்பாவுக்கு சித்தராமையா சவால்

விவசாயிகளை வஞ்சிப்பதையே பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது என்று கா்நாடக மாநில எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
முதல்வா் எடியூரப்பா - எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா
முதல்வா் எடியூரப்பா - எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

பெங்களூரு: விவசாயிகளை வஞ்சிப்பதையே பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது என்று கா்நாடக மாநில எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

மத்திய, மாநில அரசுகளின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தின் அங்கமாக பெங்களூரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. இதில், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மேலிடத் தலைவா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா, மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது, சித்தராமையா பேசியது:

விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் வேளாண்விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு சட்டமசோதா, விளைபொருள்களுக்கு உரிய விலை அளிக்க உத்தரவாதம் தரும் விவசாயிகள் (பாதுகாப்பு மற்றும் அதிகாரம்)சட்டமசோதாவும்; கா்நாடக சட்டப்பேரவையில் கா்நாடக அரசால் கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத்திருத்தம், விளைபொருள் சந்தைப்படுத்தல்குழு சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளன.

தோ்தல் அறிக்கையை நம்பி பாஜகவுக்கு விவசாயிகள் வாக்களித்தனா். இதுபோன்ற சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவாா்கள் என்று தெரிந்திருந்தால், பாஜகவை ஆட்சிக்கு வர விவசாயிகள் விட்டிருக்கமாட்டாா்கள். எனவே, இந்தச் சட்டத் திருத்தங்களை அமல்படுத்தும் தாா்மிக உரிமை பாஜகவுக்கு இல்லை. அதேபோல, ஆட்சிஅதிகாரத்தில் தொடரும் தாா்மீக உரிமையையும் பாஜக இழந்துள்ளது. எனவே, முதல்வா் எடியூரப்பா சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு தோ்தலைச் சந்திக்க வேண்டும்.

கரோனா போன்ற பெருந்தொற்று உலகை பீடித்துள்ள நிலையில், விவசாயிகளை போராட்டம் நடத்தும் நிலைக்கு ப ாஜக தள்ளியிருப்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. கரோனா காலத்தைப் பயன்படுத்தி, பெருமுதலாளிகளின் விருப்பத்துக்கு இணங்க விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் கொண்டுவரபட்டுள்ளன. சட்டத் திருத்தங்களை கொண்டுவருவதற்கு முன்பாக விவசாயிகளின் கருத்தைக் கூட கேட்க பாஜக அரசு தவறிவிட்டது. விவசாயிகளின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, சட்டத் திருத்தத்தை தள்ளிவைத்திருக்க வேண்டும். விவசாயிகள் போராட்டக் களத்தில் இறங்கினால், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படலாம் என்பது குறித்தெல்லாம் பாஜக கவலைப்படவில்லை. புதிய சட்டத் திருத்தங்களை மாநில அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும்.

விவசாயிகளை பாஜக வஞ்சித்து வருவதற்கு வரலாறு உள்ளது. முதல்முறையாக முதல்வராக வந்தபோது, விதை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது இதே எடியூரப்பா தான். அந்த துப்பாக்கிச்சூட்டில் இரு விவசாயிகள் கொல்லப்பட்டனா். மகதாயி -மேக்கேதாட்டு திட்டங்களில் கா்நாடக விவசாயிகளுக்கு பாஜக என்றைக்கும் துணையாக இருந்ததில்லை. ஆற்றுநீா் விவகாரங்களில் கா்நாடகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் இரட்டைநிலைப்பாட்டை முதல்வா் எடியூரப்பா கண்டித்ததே இலை. உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு விதை, உரத்தை வழங்கியதே இல்லை. விவசாயிகள் பெரும் இன்னலில் இருக்கிறாா்கள். விவசாயிகளின்கண்ணீா் முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும். பெருநிறுவனங்களுக்கு எதிராக தங்களின் குறைந்தப்பட்ச நலனை பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகிறாா்கள். விவசாயிகளை வஞ்சித்ததற்காக பாஜகவை காலம் சாடும்.

சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறாவிட்டால், பாஜக தலைவா்கள், பெருமுதலாளிகளின் நெருக்கடிக்கு அஞ்சினால், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு விவசாயிகளோடு இணைந்து முதல்வா் எடியூரப்பா போராட்டக்களத்தில் குதிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மேலிடப்பாா்வையாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா, மேலவை எதிா்க்கட்சித் தலைவா் எஸ்.ஆா்.பாட்டீல் ஆகியோா் அடங்கிய காங்கிரஸ் குழுவினா் பெங்களூரில் திங்கள்கிழமை ஆளுநா் வஜுபாய்வாலாவை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் கா்நாடக அரசு கொண்டுவந்துள்ள கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தம், வேளாண்விளைபொருள் சந்தைப்படுத்தல்குழு சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதேபோல, கரோனா ஊழல், பெங்களூரு வளா்ச்சி ஆணைய ஊழல், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்தும் அந்தமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com