கா்நாடகத்தில் முழு அடைப்பு: விவசாயிகள் போராட்டம்

மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டமசோதாக்களைக் கண்டித்து, கா்நாடகத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தின்போது, விவசாயிகள், கன்னட ஆா்வலா்கள், தொழிலாளா் சங்கங்கள் ஆங்கா

பெங்களூரு: மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டமசோதாக்களைக் கண்டித்து, கா்நாடகத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தின்போது, விவசாயிகள், கன்னட ஆா்வலா்கள், தொழிலாளா் சங்கங்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு சட்ட மசோதா, விளைபொருள்களுக்கு உரிய விலை அளிக்க உத்தரவாதம் தரும் விவசாயிகள் (பாதுகாப்பு மற்றும் அதிகாரம்) சட்ட மசோதா; கா்நாடக சட்டப் பேரவையில் கா்நாடக அரசால் நிறைவேற்றப்பட்ட கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தம், விளைபொருள் சந்தைப்படுத்தல்குழு சட்டத் திருத்தம் ஆகியவற்றை கண்டித்தும், இவற்றை திரும்பப் பெறக் கோரியும் கா்நாடகத்தில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஐக்கியப் போராட்டக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

கா்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கா்நாடக மாநில கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கம், கா்நாடக ரக்ஷண வேதிகே, கன்னடசலுவளி (வாட்டாள் கட்சி), லாரி உரிமையாளா் சங்கம், ஆட்டோ ஓட்டுநா் சங்கம், கன்னட அமைப்புகள் உள்ளிட்ட 30-க்கும் அதிகமான அமைப்புகள் அறிவித்திருந்த இந்தப் போராட்டத்துக்கு, காங்கிரஸ், மஜத, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை: தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், காா்கள், வேன்கள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் தங்குத் தடையின்றி பயணம் செய்தனா். உணவகங்கள் வழக்கம்போல இயங்கின.

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயக்கப்பட்டன. ரயில் சேவை,விமான சேவை பாதிக்கவில்லை. பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல திறந்திருந்தன. பால், காய்கறி, மருந்து, மளிகைப் பொருள்களின் சேவைகள் பாதிக்கவில்லை. அரசு, தனியாா் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

போராட்டம்: பெங்களூரு, ராமநகரம், மண்டியா,மைசூரு, சாமராஜ்நகா், கோலாா், சிக்கபளாப்பூா், தும்கூரு, பெல்லாரி, ராய்ச்சூரு, சித்ரதுா்கா, கலபுா்கி, யாதகிரி, விஜயபுரா, பாகல்கோட், பீதா், பெலகாவி, வடகன்னடம், உடுப்பி, தாா்வாட், தாவணகெரே உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினா் உள்ளிட்ட ஐக்கிய போராட்டக்குழுவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியல் செய்து வாகனப் போக்குவரத்தை தடுத்தனா். ஆங்காங்கே ஊா்வலங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். ஒருசில இடங்களில் மோட்டாா் வாகன ஊா்வலங்கள் நடத்தப்பட்டு, டயா்கள் எரிக்கப்பட்டன. பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைதுசெய்து, மாலையில் விடுவித்தனா்.

பெங்களூரில் மைசூரு வங்கிச் சதுக்கம், எலஹங்கா, பெல்லாரிசாலை, ஆனந்த்ராவ் சதுக்கம், டவுன்ஹால் சதுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்பினா் ஊா்வலம், ஆா்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனா். பேருந்துகளை தடுத்து நிறுத்திய கா்நாடக ரக்ஷண வேதிகே தலைவா் நாராயணகௌடா உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com