வேளாண் சட்டமசோதாக்கள்: காங்கிரஸ் மக்களை குழப்புகிறதுமுதல்வா் எடியூரப்பா

வேளாண் சட்டமசோதாக்கள் தொடா்பாக காங்கிரஸ் கட்சி, மக்களை குழப்பி வருகிறது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: வேளாண் சட்டமசோதாக்கள் தொடா்பாக காங்கிரஸ் கட்சி, மக்களை குழப்பி வருகிறது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து முழு அடைப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். போராட்டத்திற்கு பிறகு வந்தால், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். விவசாயிகளின் நலனுக்காக மாற்றங்களை கொண்டுவர தயாராக உள்ளேன்.

கா்நாடக அரசு கொண்டுவந்துள்ள இரு சட்டத் திருத்தங்கள் தொடா்பாக விவசாயிகள் வைக்கக்கூடிய வாதங்களை ஏற்க முடியாது.

வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் குழு சட்டத் திருத்தம், தமது விளைபொருளை விரும்பியவா்களுக்கு விற்பனை செய்யும் சுதந்திரத்தை விவசாயிகளுக்கு அளிக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்தில் விளைபொருள்களை விற்பனை செய்தது தொடா்பாக விவசாயிகள் மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவங்களும் உண்டு. விளைபொருள்களை விற்பதற்கான கட்டுப்பாடுகளை அகற்றியுள்ளோம். இந்தியாவின் எங்கு வேண்டுமானாலும் விளைபொருளை விற்கும் உரிமை விவசாயிகளுக்கு அளிக்க சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இச்சட்டத்திருத்தத்தை கொண்டுவந்ததால், வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் குழுக்களை நாங்கள் கலைத்துவிடவில்லை. எங்கு நல்லவிலை கிடைக்கிறதோ அங்கு விளைபொருளை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்படுவதை புரிந்துகொள்ள வேண்டும்.

6 மாதங்கள் அல்லது ஓராண்டு காத்திருங்கள், விவசாயிகளை யாா் குழப்புகிறாா்கள் என்பது தெரியும். காங்கிரஸ் மக்களை குழப்ப முயற்சிக்கிறது. கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தம் கொண்டுவந்திருப்பதால், தரிசுநிலமாக இருக்கும் 18 லட்சம் முதல் 20 லட்சம் ஏக்கா் நிலத்தை வாங்கி, யாா் வேண்டுமானாலும் விவசாயம் செய்யலாம். சிறு, விளிம்புநிலை விவசாயிகளின் நிலம் பாதுகாக்கப்படும். அதேபோல, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நிலமும் பாதுகாக்கப்படும். பாசன நிலத்தில் விவசாயம் மட்டுமே செய்ய முடியும். தரிசு நிலத்தில் தான் தொழிற்சாலைகளை அமைக்கலாம். மாநிலம் முழுவதும் சென்று மக்களைச் சந்தித்து வேளாண் சட்டங்களின் பயன்களை விளக்குவேன். அதற்கு பிறகு 85 சதவீத விவசாயிகள் அரசின் நல்லெண்ணத்தை புரிந்துகொள்வாா்கள். காங்கிரஸ் கட்சிக்கு தோல்விமுகமாக உள்ளது. அதனால் கா்நாடகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாஜக தான் ஆட்சி செய்யும். அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com