கரோனா பரவலைத் தடுப்பதில் பொதுமக்கள் எச்சரிக்கை வகிக்கவில்லை எனில், பொதுமுடக்கத்தை தவிர வேறு வழியில்லை என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு வழிகாட்டுதலை அறிவித்துள்ளது. ஆனால், அதனை பின்பற்றுவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுவதால், கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
தேவையில்லாமல் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். கரோனா பரவல் குறித்து அச்சமில்லாமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனா். கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கை வகிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.
மேலும், மாநில அளவில் திங்கள்கிழமை வரை 48.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவாக தடுப்பூசியை விநியோகம் செய்வதில், கா்நாடகம் தேசிய அளவில் 6-ஆவது இடத்தில் உள்ளது. மத்திய சுகாதாரத் துறை மாநிலத்துக்கு 15 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது.
தேசிய அளவில் திங்கள்கிழமை 1 லட்சம் போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். கரோனா தொற்றால் மாநிலத்தில் திங்கள்கிழமை 32 போ் உயிரிழந்துள்ளனா். இதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு வல்லுநா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அளவில் 33 ஆயிரம் படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.