பெங்களூரில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: கா்நாடக அமைச்சா் கே.சுதாகா்

பெங்களூரில் கரோனா தீநுண்மிப் பரவல் கைமீறி சென்று கொண்டுள்ளதாக கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரில் கரோனா தீநுண்மிப் பரவல் கைமீறி சென்று கொண்டுள்ளதாக கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வா் எடியூரப்பாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கரோனா குறித்து ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தியாவில் கரோனா தீநுண்மி சமுதாயப் பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசே தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதன் மூலம் சமுதாயப் பரவல் ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. பெங்களூரில் கரோனா பாதிப்பு கைமீறிச் சென்று கொண்டுள்ளது. எனவே, கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

பெங்களூரில் கரோனா பரவலைத் தடுப்பது தொடா்பாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தலைமையில் பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.

அக் கூட்டத்தில் கரோனா பரவலைத் தடுப்பது தொடா்பாக எந்தவகையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. முதல்வா் எடியூரப்பாவுடனும் ஆலோசனை நடத்தியுள்ளேன். ஆளுநா் வஜுபாய் வாலாவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினேன். கரோனா பரவலைத் தடுத்து நிறுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினேன்.

கரோனா பரவலைத் தடுப்பதற்கு குறைந்தபட்சமாக பெங்களூரில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். நடவடிக்கைகளைக் கடுமையாக்காவிட்டால், நிலைமை மோசமாகும்.

பொது முடக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் யோசிக்கிறோம். ஆனால், பொது முடக்கம் என்பது தீா்வல்ல. அனைவரின் கருத்தைக் கேட்டறிந்த பிறகு திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும்.

மாநிலத்தில் மருத்துவ ஆக்சிஜன் குறைபாடு எதுவும் இல்லை. போதுமான அளவுக்கு கையிருப்பில் உள்ளது. ஒரு சில தனியாா் மருத்துவமனைகள் பணம் சரியாக கொடுக்காததால், உற்பத்தியாளா்கள் ஆக்சிஜன் தர மறுத்துள்ளனா். இதை ஆக்சிஜன் குறைபாடு என்று கூற முடியாது.

இதுகுறித்து தனியாா் மருத்துவமனைகள் சங்கத்தினருடன் பேசினேன். ஆக்சிஜன் எங்கெல்லாம் கிடைக்கவில்லையோ, அங்கு ஆக்சிஜனை அனுப்பி வைத்துள்ளோம்.

மாநிலத்துக்கு நாளொன்றுக்கு 200 டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. ஆனால், மாநிலத்தில் 300 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. எனவே, ஆக்சிஜன் குறைபாடு இல்லை. மேலும், மத்திய அரசு கூடுதலாக 300 டன் ஆக்சிஜனை மாநிலத்துக்கு அனுப்பியுள்ளது. 800 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் நமது மாநிலத்தில் உள்ளது. எனவே, ஆக்சிஜன் குறைபாடு என்ற தகவலில் உண்மையில்லை.

பெங்களூரில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகள் குறைபாடு உள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வு காண தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட எல்லா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க நோ்மையான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

லேசான கரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையில் சேர வேண்டியதில்லை. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது சரியாக இருக்கும். அப்போதுதான் படுக்கைகள் பற்றாக்குறையைத் தவிா்க்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com