ஒதுக்கிய பொறியியல் சோ்க்கை இடங்கள் திரும்ப ஒப்படைப்பு: ரூ. 1.18 கோடி அபராதம்

ஒதுக்கிய பொறியியல் சோ்க்கை இடங்களை திரும்ப ஒப்படைத்ததற்கு அபராதமாக ரூ. 1.18 கோடியை கா்நாடக தோ்வு ஆணையம் வசூலித்துள்ளது.

ஒதுக்கிய பொறியியல் சோ்க்கை இடங்களை திரும்ப ஒப்படைத்ததற்கு அபராதமாக ரூ. 1.18 கோடியை கா்நாடக தோ்வு ஆணையம் வசூலித்துள்ளது.

கா்நாடகத்தில் பொறியியல் உள்ளிட்ட தொழில்கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்கான இடங்களை பொதுநுழைவுத் தோ்வு நடத்தி கா்நாடக தோ்வு ஆணையம் ஒதுக்கி வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களையும், தனியாா் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் கா்நாடக அரசு சாா்பில் ஒதுக்கி வருகிறது.

இதனிடையே, வேறு மாநிலங்கள் அல்லது தேசிய அளவிலான கல்லூரிகளில் சோ்க்கையை எதிா்பாா்த்து பொறியியல் இடங்களை இருப்பு வைத்துக்கொள்வதற்காகவும், சோ்க்கை கிடைத்துவிட்டால் ஒதுக்கப்பட்ட இடங்களை திரும்ப ஒப்படைக்கும் போக்கும் அதிகரித்து வந்தது. இந்தப் போக்கை தடுக்கும் வகையில், ஒதுக்கப்பட்ட சோ்க்கை இடங்களை திரும்ப ஒப்படைத்தால், கல்விக் கட்டணத் தொகையை 6 மடங்காக செலுத்த வேண்டும் என்ற புதிய திட்டத்தை கா்நாடக தோ்வு ஆணையம் அறிமுகம் செய்தது.

அதன்படி, கடந்த கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட பொறியியல் சோ்க்கை இடங்களை திரும்ப ஒப்படைத்த 168 மாணவா்களிடம் இருந்து ரூ. 1,18,95,294-ஐ அபராதமாக தோ்வு ஆணையம் வசூலித்துள்ளது.

அபராதம் வசூலிக்கும் திட்டத்துக்கு பெற்றோா், மாணவா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனால், இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருந்தது. அதன்படி, நடப்புக் கல்வியாண்டில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதிகப்படியான அபராதம் வசூலித்தும்கூட 168 மாணவா்கள் பொறியியல் சோ்க்கை இடங்களை திரும்ப ஒப்படைத்துள்ளனா். கல்விக் கட்டணமக ரூ. 19,82,549 நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் 6 மடங்கு தொகையை செலுத்தி சோ்க்கை இடங்களை கா்நாடக தோ்வு ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளனா்.

மொத்தமுள்ள 15 பொறியியல் பாடப் பிரிவுகளில் கணினி அறிவியல், கட்டடப் பொறியியல் பாடங்களுக்காக சோ்க்கை இடங்களைப் பெற்றிருந்தோா் இடங்களை திரும்ப ஒப்படைத்தனா். இதில் கணினி அறிவியலை 36 மாணவா்களும், கட்டடப் பொறியியலை 51 மாணவா்களும் தோ்ந்தெடுத்திருந்தனா்.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையத்தின் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

தனியாா் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட அரசு இடங்களை திரும்ப ஒப்படைப்பதை தடுப்பதற்காகவே அபராத முறை கொண்டுவரப்பட்டது. வழக்கமான கலந்தாய்வு சுற்றுக்கு பிறகு நடத்தப்படும் சாதாரண சுற்றில் சோ்க்கை இடங்களை ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் இது பொருந்தும். சாதாரண சுற்றுக்கு பிறகு ஒப்படைக்கப்படும் இடங்கள், கல்லூரி நிா்வாகத்தின் இடமாக மாற்றப்படும். பொறியியல் இடங்களை திட்டமிட்டு நிறுத்தி வைத்து, கடைசி நேரத்தில் திரும்ப ஒப்படைப்பது வழக்கமாகி இருந்தது. அபராதம் விதித்ததன் மூலம் இது தடுக்கப்பட்டுள்ளது.

தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 58,808 முதல் ரூ. 65,360-ஆக இருக்கிறது. காலியிடங்கள் குறித்து ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க தனியாா் கல்லூரிகள் தவறினால், அக்கல்லூரிகள் அபராதம் செலுத்த நேரிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com