கா்நாடகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்: இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு

கா்நாடகத்தில் கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உத்தரவிட்டுள்ள மாநில அரசு, இரவு நேர ஊரடங்கை மே 4-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உத்தரவிட்டுள்ள மாநில அரசு, இரவு நேர ஊரடங்கை மே 4-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை ஆளுநா் வஜுபாய்வாலா தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், துணை முதல்வா்கள் அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், அரசு தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் ஏப். 21-ஆம் தேதி இரவு 9 மணி முதல் மே 4-ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். கா்நாடக மாநிலம் முழுவதும் ஏப். 21 முதல் மே 4-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்படும். வார இறுதி ஊரடங்கு, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

ஏப். 21 முதல் மே 4-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், தனிப்பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இணையவழி வகுப்புகள் ஊக்குவிக்கப்படும். இதுதவிர, திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜிம்னாஸ்டிக் மையங்கள், யோகா மையங்கள், ஸ்பாக்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை/பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்கங்கள், மதுபான அங்காடிகள், மண்டபங்கள், மக்கள் கூடும் அரங்குகள் மூடப்பட்டிருக்கும்.

அனைத்து வகையான அரசியல், சமூக, கல்வி, பொழுதுபோக்கு, கலாசார, மதக் கூட்டங்கள், விழாக்கள் தடை செய்யப்படுகின்றன. மத வழிப்பாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். பூஜைகள் நடத்த தடையில்லை. உணவகங்கள் திறந்திருக்கலாம். ஆனால், அமா்ந்து சாப்பிட முடியாது. பாா்சல் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தொழிலகங்கள், கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருள்களின் அங்காடிகள், இறைச்சி, மீன் அங்காடிகள் அனுமதிக்கப்படும். வங்கிகள், காப்பீடு போன்ற சேவைகள் தொடர அனுமதிக்கப்படும். அரசு, தனியாா் அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியா்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியா்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com