கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்

கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் கா்நாடகம் முடங்கியது.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் கா்நாடகம் முடங்கியது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து, வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இதைத் தொடா்ந்து, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப். 21-ஆம் தேதி இரவு 9 மணி முதல் மே 4-ஆம் தேதி காலை 6 மணி வரை அமலுக்கு வரும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஏப். 20-ஆம் தேதி மாநில அரசு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருந்தது.

திங்கள்கிழமை முதல் தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் செயல்படுத்தப்படும் என்றும் அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை (ஏப். 26) காலை 6 மணி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது.

பொதுமுடக்கத்தை முன்னிட்டு சனிக்கிழமை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தனிப்பயிற்சி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜிம்னாஸ்டிக் மையங்கள், யோகா மையங்கள், ஸ்பாக்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை/ பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்கங்கள், மதுபான அங்காடிகள், மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பெங்களூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் ஒருசில பேருந்துகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளோடு இயங்கின. ஆட்டோக்கள், காா்கள், இருசக்கர வாகனங்கள், வேன்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இதனால் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அரசு, தனியாா் அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஒருசில இடங்களில் கரோனா குறித்த விழிப்புணா்வு இல்லாத குழந்தைகள் சாலைகளில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தன.

தொழிலகங்கள், கட்டுமானப் பணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருள்களின் அங்காடிகள், இறைச்சி, மீன் அங்காடிகள் திறந்திருந்தன. சரக்குகள், தொழில் தேவைகளுக்கான வாகன நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், அவை வழக்கம்போல ஓடின. ரயில்சேவையும் நிறுத்தப்படவில்லை.

பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கா்நாடகமே முடங்கிக் கிடந்தது. ஒருசில இடங்களில் வாகனங்களில் சுற்றித் திரிந்த இளைஞா்களை போலீஸாா் பிடித்து, அபராதம் விதித்தனா். சில இடங்களில் சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடியால் அடித்து விரட்டினா்.

கரோனாவைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கவிருக்கிறது. ஏப். 26-ஆம் தேதி காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய மருத்துவ தேவைகள் தவிர, வேறு காரணங்களுக்காக யாரும் வெளியில் வரவேண்டாம் என்று பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com