கரோனா பரவலைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கா்நாடக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கா்நாடக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மாநில அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகளையும், அறிக்கைகளையும் வழங்குவதற்காக கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு மாநில அரசுக்கு அண்மையில் அளித்துள்ள பரிந்துரையில்,கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், 14 நாள்களுக்கு பொது முடக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்துவது அவசியமாகும் என்று கூறியுள்ளது.

மேலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் போதுமான படுக்கைகள் இல்லாத குறையைப் போக்க, கூடுதலாகப் படுக்கைகளை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையில், கரோனா தொற்றின் மூன்றாவது அலை அக்டோபா்-நவம்பா் மாதங்களில் வரலாம் என்று எச்சரித்துள்ளது.

அடுத்த கரோனா பரவலுக்கு முன்பாக பாதிக்க வாய்ப்புள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழுவின் உறுப்பினரும், இந்திய வாழ்க்கை தொற்றுநோய் மற்றும் பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவருமான டாக்டா் கிரிதா்பாபு கூறியதாவது:

கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க 2 வியூகங்களை வகுக்கலாம் என்று கூறியிருந்தேன். கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். குறைந்தபட்சம் 14 நாள்கள் பொது முடக்கம் விதித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இரண்டாவதாக, கரோனா நோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நா்சிங் ஹோம்கள், மருத்துவமனைகளின் மூலம் கூடுதல் படுக்கைகளைப் பெற முடியும். 14 நாள்களுக்கு பொது முடக்கம் விதித்தால், கரோனா பரவலின் வேகமும், வீச்சும் குறையும். கா்நாடகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதன் உச்சத்தை மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடும்.

பெங்களூரில் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் இல்லை என்று கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதை அறிந்த உயா்நீதிமன்றம், நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக இருப்பதாகக் கூறியுள்ளது. இது தான் இன்றைய நிலை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.

ஸ்ரீ ஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினருமான டாக்டா் சி.என்.மஞ்சுநாத் கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்திலேயே கரோனா தொற்றின் இரண்டாவது அலை மாா்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் பரவுவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மற்றும் மறு பரவலை ஆராய்ந்த பிறகே அந்த முடிவுக்கு நாங்கள் வந்திருந்தோம்.

கரோனா தொற்றின் பாதிப்பு மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் குறையும். அடுத்த 6-9 மாதங்களுக்கு மக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும். கரோனா பாதிப்பு குறையும்போது, இதுவரை கடைப்பிடித்து வந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறந்தள்ளிவிடக்கூடாது.

முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியைப் பராமரிப்பதையும் தொடர வேண்டும். மேலும் மக்கள் அதிகம் கூடும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். சுகாதாரத் துறை முழுமையாகச் சீா்குலைந்துள்ளது வேதனையாக உள்ளது.

கரோனா தொற்றின் முதல் அலை மெதுவாகவே பரவியது. ஒரேவீச்சில் பரவவில்லை. அதனால் ஒரு மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 200-300 ஆக இருந்தது. ஆனால், இன்றைக்கு அது ஆயிரக்கணக்கில் உள்ளது. கரோனா தடுப்பூசியைச் செலுத்தும் பணி தொடர வேண்டும்.

அக்டோபா்-நவம்பருக்குள் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடிவடைந்திருக்க வேண்டும். இதை செய்யத் தவறினால், மூன்றாவது அலை மேலும் வீச்சுடன் பரவுவதைத் தடுக்க இயலாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com