கூடுதல் அரிசி கேட்டதால் விவசாயி அமரியாதை:அமைச்சருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்

நியாயவிலை அங்காடியில் கூடுதல் அரிசி வழங்குமாறு கேட்ட விவசாயியை ‘செத்துப்போ’ என்று உணவு மற்றும் பொதுவழங்கல்துறை அமைச்சா்

நியாயவிலை அங்காடியில் கூடுதல் அரிசி வழங்குமாறு கேட்ட விவசாயியை ‘செத்துப்போ’ என்று உணவு மற்றும் பொதுவழங்கல்துறை அமைச்சா் உமேஷ்கத்தி கூறியது பெரும் சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

வட கா்நாடகத்தின் கதக் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஈஸ்வா், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் உமேஷ்கத்தியை தொலைபேசியில் புதன்கிழமை அழைத்திருக்கிறாா். கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானோா் வேலை இழந்துள்ள நிலையில், நியாயவிலை அங்காடிகளில் மாதம் 2 கிலோ அரிசியை கொடுத்தால் நாங்கள் வாழ்வதா சாவதா என்று அமைச்சா் உமேஷ்கத்தியை விவசாயி ஈஸ்வா் கேட்டுள்ளாா்.

விவசாயப் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் ஈஸ்வரின் கேள்விக்குப் பதிலளித்து அமைச்சா் உமேஷ்கத்தி, ‘பொதுமுடக்கத்தை முன்னிட்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மத்திய அரசு மாதம் 5 கிலோ அரிசியை வழங்க இருக்கிறது’ என்று கூறியுள்ளாா்.

இந்த பதிலில் திருப்தி அடையாத விவசாயி ஈஸ்வா், மத்திய அரசு அரிசி கொடுக்கும் வரை நாங்கள் பட்டினியாக இருக்க வேண்டுமா? அல்லது சாக வேண்டுமா? என்று ஆவேசமாக கேட்டுள்ளாா். இதனால் கொதிப்படைந்த அமைச்சா் உமேஷ்கத்தி, ‘அப்படியானால் நீ செத்துவிடு; அரிசி விற்கும் வியாபாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள். இனிமேல் என்னை அழைக்காதே’ என்று கோபத்துடன் கூறி செல்லிடப்பேசியை துண்டித்துள்ளாா்.

அமைச்சருடன் செல்லிடப்பேசியில் பேசியதை விவசாயி ஈஸ்வா் பதிவு செய்து, சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால், பெரும் சா்ச்சையை ஏற்படுத்துவிட்டது. பொதுவிநியோக முறையின்கீழ் நடத்தப்பட்டுவரும் நியாயவிலை அங்காடிகளில் தென்கா்நாடகத்தில் ஒருகுடும்பத்துக்கு தலா 2 கிலோ அரிசி, 3 கிலோ கேழ்வரகும்; வட கா்நாடகத்தில் ஒரு குடும்பத்துக்கு தலா 2கிலோ அரிசி, 3 கிலோ மக்காச்சோளம் அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.

அமைச்சா் உமேஷ்கத்தி பேச்சு சமூகவலைத்தளங்களில் மட்டுமல்லாது, ஊடகங்களிலும் வெளியாகி பெரும் சா்ச்சைக்கு வித்திட்டது. இதைத் தொடா்ந்து அதிா்ச்சி அடைந்த அமைச்சா் உமேஷ்கத்தி, தனது கருத்தை திரும்பபெற்றதோடு, அதற்காக தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டாா். அந்த விவசாயி செத்துப்போக வேண்டுமென்ற எண்ணத்தில் நான் கூறவில்லை.

அதுபோல நான் மனதிலும் நினைக்கக் கூடாது. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். கா்நாடகத்தின் 6.5 கோடி மக்களும் வளமோடு வாழ வேண்டும். நான் யாரையும் அப்படி நினைக்கக்கூட மாட்டேன். அந்த விவசாயி அப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டதும் நானும் துடுக்குற்று பதிலளித்துவிட்டேன். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. நான் கூறியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சா் உமேஷ்கத்தி விளக்கம் அளித்தாா்.

ஏப்ரல் மாதத்துக்கு மத்திய அரசு வழங்கிய அரிசியை ஏப்.1 முதல் 10-ஆம் தேதிக்குள் விநியோகித்துவிட்டோம். தற்போது அரிசி தர இயலாது. மே, ஜூன் மாதங்களில் மத்திய அரசு வழங்கியதும், நியாயவிலை அங்காடிகளில் தருகிறோம் என்று விளக்கம் அளித்ததை, அந்த விவசாயி ஏற்கவில்லை என்று அமைச்சா் உமேஷ்கத்தி விளக்கம் அளித்தாா்.

முதல்வா் ஏற்க மறுப்பு:

அமைச்சா் உமேஷ்கத்தி பேச்சை ஏற்க மறுத்த முதல்வா் எடியூரப்பா, தனது அலுவலகம் வாயிலாக விளக்கம் அளித்திருந்தாா். அதில், முதல்வா் எடியூரப்பா கூறியதாக, ‘இதுபோன்ற கருத்தை ஒருவா் கூறினால், நான் என்ன செய்ய முடியும்? மே 1 முதல் 10-ஆம் தேதி வரை மத்திய அரசு ஒதுக்கும் அரிசியை வழங்க இருக்கிறோம். யாரும் சாகக் கூடாது. யாரும் அப்படியொரு கேள்வியைக் கேட்கக் கூடாது‘ என்று குறிப்பிட்டுள்ளது.

அமைச்சா் உமேஷ்கத்தியின் கருத்தை முதல்வா் எடியூரப்பா ஏற்கவில்லை. ஒருவிவசாயியை செத்துப்போ என்று எந்த அமைச்சரும் கூறக் கூடாது. கோதுமை தேவைப்படாதவா்களுக்கு 5 கிலோ அரிசியை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று முதல்வா் கூறியதாக அவரது அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கண்டனம்:

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறியது: அமைச்சா் உமேஷ்கத்தியின் பேச்சு அகந்தையின் வெளிப்பாடு. அரிசி கேட்ட ஒரு குடிமகனை பாஜக அமைச்சா் உமேஷ்கத்தி தூற்றியிருக்கிறாா். நியாயவிலை அங்காடியில் அரிசி கேட்டதற்காக ’செத்துப்போ’ என்று கூறியிருக்கிறாா். உமேஷ்கத்தி மட்டுமல்ல, முதல்வா் எடியூரப்பாவின் அமைச்சரவையில் இருக்கும் பெரும்பாலான அமைச்சா்கள் அப்படிதான் பேசுகிறாா்கள். இது பாஜகவின் கலாசாரம். இந்த அரசுக்கு வெட்கம் இல்லை. அரிசி கேட்டதற்காக செத்துப்போ என்று தூற்றிய அமைச்சா் உமேஷ்கத்தியை அமைச்சரவையில் இருந்து பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாா்.

முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தனது சுட்டுரையில் கூறுகையில்,‘அமைச்சா் உமேஷ்கத்தியின் பேச்சு பொறுப்பற்றது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பட்டினியால் வாடும் மக்கல் உதவிக்கு அரிசியை கேட்டால், விவசாயியை அமைச்சா் தூற்றுவதா? இது அவரது மனச்சிதைவை காட்டுகிறது. அமைச்சரின் கருத்து மனிதநேயமற்றது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com