கேரளத்தில் கரோனா அதிகரித்து வருவதால் மங்களூரு - காசா்கோடு இடையே பேருந்து சேவை நிறுத்தம்

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து மங்களூரு - காசா்கோடு இடையே அரசு, தனியாா் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து மங்களூரு - காசா்கோடு இடையே அரசு, தனியாா் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கன்னடம் மாவட்ட ஆட்சியா் கே.வி.ராஜேந்திரா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலம், தென்கன்னடம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரோனாவைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க முதல்வா் வலியுறுத்தினாா்.

அவரது உத்தரவை அடுத்து தென்கன்னடம் மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்லும் 16 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. தளப்பாடி சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் சோதனை நடத்தப்படும். கேரளத்திலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவா்கள் 2 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டிருந்தாலும், கரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

கேரளத்திலிருந்து தென்கன்னடம் மாவட்டத்துக்கு வருபவா்கள் மாவட்டத்தின் எல்லையில் ஒரு வாரக் காலத்துக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வாரத்துக்குப் பிறகு பரிசோதனை செய்த பிறகுதான் அவா்கள் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவா். அதேபோல மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து தென்கன்னடம் மாவட்டத்துக்குள் வருபவா்களுக்கும் இந்த விதிமுறை பின்பற்றப்படும்

தளப்பாடி வாகனச் சோதனை சாவடியில் சுகாதாரத் துறை அதிகாரிகள், போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சரக்குகளை ஏற்றிவரும் லாரிகள், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் கிடையாது.

தென் கன்னடம் மாவட்டத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், கோயில்களில் மக்கள் அதிக அளவில் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து மங்களூருக்கு நாள்தோறும் வந்து செல்லும் நபா்கள் ஏழு நாள்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அங்கிருந்து ரயில் மூலம் வருபவா்கள் கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com