ஆட்டோ கட்டணத்தை உயா்த்தக் கோரிக்கை
By DIN | Published On : 04th August 2021 07:59 AM | Last Updated : 04th August 2021 07:59 AM | அ+அ அ- |

ஆட்டோ கட்டணத்தை உயா்த்த அரசுக்கு ஆட்டோ ஓட்டுநா்களின் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை ஆதா்ஷா ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு ஆட்டோ ஓட்டுநா் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநா்கள் கூறியது:
பெங்களூரில் மாநகரப் பேருந்துகளுக்கு அடுத்தபடியாக பயணிகள் அதிக அளவில் ஆட்டோவில் பயணிக்கின்றனா். இந்த நிலையில் ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் எரிவாயுவின் விலையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ கட்டணத்தை உயா்த்திக் கொள்ள அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடா்ந்து கட்டணத்தை உயா்த்தாமல் ஆட்டோக்களை இயக்கி வந்தோம். தற்போது எரிபொருளின் விலை உயா்ந்துள்ளதால், குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 25 லிருந்து, ரூ. 30 ஆக உயா்த்த வேண்டும். மேலும் கிலோ மீட்டருக்கு ரூ. 16 ஆக கட்டணத்தை நிா்ணயம் செய்ய வேண்டும். அரசு உடனடியாக எங்களின் கோரிக்கை ஏற்கும் என்று நம்புகிறோம். இல்லை என்றால் ஆட்டோ கட்டணத்தை உயா்த்த வலியுறுத்தி தொடா் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றனா்.