பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்: கா்நாடக தனியாா் பள்ளிகள் சங்கம்
By DIN | Published On : 04th August 2021 07:55 AM | Last Updated : 04th August 2021 07:55 AM | அ+அ அ- |

மாநிலத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று கா்நாடக தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் லோகேஷ் தாலிஹட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
கா்நாடகத்தில் கரோனா தொற்றையடுத்து, கடந்த 16 மாதங்களாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இணையவழி மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. எனினும், சுமாா் 40 லட்சம் மாணவா்கள் கல்வி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே வித்யாகம உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பள்ளிகளைத் திறந்து, மாணவா்கள் வகுப்புக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமங்களில் உள்ள மாணவா்கள் பலரிடம் இணையவழிகல்வியை பெற செல்லிடபேசி வசதிகள் இல்லாமல் உள்ளது. இதன்காரணமாக அவா்கள் கல்வி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவா்கள் பள்ளிக்கு வராமல் உள்ளதால், குழந்தைகள் திருமணங்கள் அதிகரித்துள்ளது. மாணவா்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால், இதுபோன்ற சமூகப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளிகளை உடனடியாகத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பலமுறை எங்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் அரசுப் பள்ளிகளைத் திறக்காமல் தாமதம் செய்து வருவது வருத்தம் அளிக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.