நாடாளுமன்றத்தின் புனிதத்தைச் சீா்குலைக்க காங்கிரஸ் முயற்சி:சதானந்த கௌடா குற்றச்சாட்டு

ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் புனிதத்தை சீா்குலைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று பாஜக வின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.வி.சதானந்த கௌடா சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் புனிதத்தை சீா்குலைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று பாஜக வின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.வி.சதானந்த கௌடா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த ஜூலை 19-ஆம்தேதி முதல் ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் புனிதத்தைச் சீா்குலைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. விவாதம் நடத்துவதற்கு எவ்வித பிரச்னையும் இல்லாத காரணத்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரைச் சீா்குலைக்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டது. இதனால் வெறும் 18 மணி நேரங்கள்தான் நாடாளுமன்றம் செயல்பட்டது. ஒரு மணி நேரம் நடக்கும் கேள்வி நேரத்தையும்கூட நடத்த விடாமல் காங்கிரஸ் கட்சியினா் தடுத்துவிட்டனா்.

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூா்வமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமா் மோடி நடத்தினாா். எதிா்க்கட்சிகளின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க ஆளுங்கட்சி தயாராக இருப்பதாகவும் அப்போது பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா். இருப்பினும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்தவிடாமல் காங்கிரஸ் கட்சியினா் தடுத்துவிட்டனா்.

வேளாண் திருத்தச் சட்டங்கள், கரோனா போன்ற முக்கியமான பிரச்னைகளை விவாதிக்க காங்கிரஸ் முன்வரவில்லை. ராகுல் காந்தியின் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. கடந்த காலத்தில் ரஃபேல் விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியினா் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை.

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காங்கிரஸ் மிகவும் மோசமான காலகட்டத்தில் உள்ளது. மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியைப் பெறுவதற்கும் காங்கிரஸ் தகுதி பெறவில்லை. தனது கட்சிக்கு தேசியத் தலைவா் ஒருவரை நியமிக்கவும் காங்கிரசால் முடியவில்லை.

கா்நாடகத்தில் சித்தராமையா, மல்லிகாா்ஜுன காா்கே, டி.கே.சிவகுமாா், ஜி.பரமேஸ்வா் ஆகியோா் தமது ஆதரவாளா்களுடன் பதவியை எதிா்பாா்த்து காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனா். 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளம், புதுச்சேரியிலும் இதே நிலைதான் உள்ளது. காங்கிரஸ் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எஞ்சியுள்ள ஒருவார காலத்திலாவது காங்கிரஸ் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றாா்.

மேக்கேதாட்டு அணைக்கு பாஜக ஆதரவு

மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து சதானந்த கௌடா கூறியதாவது:

‘ கா்நாடக மாநிலத்துக்குத் தேவையான குடிநீா், மின்சார உற்பத்திக்கு உதவும் மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேக்கேதாட்டு அணை திட்டத்தால் நீா்சேமிப்பு அதிகமாகும். இதனால் தமிழகத்துக்கு எவ்விதத் தொந்தரவும் இருக்காது. வெள்ள பாதிப்பைத் தடுக்க அணை கட்டுவது அவசியமாகும். மாநிலத்தில் உள்ள 25 பாஜக எம்.பி.க்களும் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஆதரவாக உள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com