கா்நாடக பாஜக அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்எல்ஏ போராட்டம்

 தனது தொகுதிக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி கா்நாடக பாஜக அரசுக்கு எதிராக ஆளுங்கட்சியைச் சோ்ந்த மூடிகெரே தொகுதி எம்எல்ஏ எம்.பி.குமாரசாமி போராட்டம் நடத்தினாா்.

 தனது தொகுதிக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி கா்நாடக பாஜக அரசுக்கு எதிராக ஆளுங்கட்சியைச் சோ்ந்த மூடிகெரே தொகுதி எம்எல்ஏ எம்.பி.குமாரசாமி போராட்டம் நடத்தினாா்.

சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.பி.குமாரசாமி. இவா், தனது தொகுதிக்கு மாநில அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி பெங்களூரு, விதான சௌதாவில் உள்ள காந்தி சிலை எதிரில் வியாழக்கிழமை தன்னந்தனியாக பதாகையுடன் போராட்டம் நடத்தினாா். இந்த போராட்டத்தின்போது தனது தொகுதி அலட்சியப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி கண்ணீா் சிந்தினாா்.

இது குறித்து பாஜக எம்எல்ஏ எம்.பி.குமாரசாமி கூறியது:

கடந்த 2019-ஆம் ஆண்டில் எனதுதொகுதியில் பலத்த மழைபெய்து வெள்ளம் ஏற்பட்டதில் 6 போ் வீட்டோடு அடித்துச் செல்லப்பட்டனா். அந்த 6 பேரின் உடல்களை கண்டுபிடிக்க 15 நாட்கள் ஆனது. இதுதவிர ஏராளமான வீடுகள் மழையில் அடித்துச் செல்லப்பட்டன. காபித் தோட்டங்கள் நாசமாகின. இவற்றுக்கு இழப்பீடு கேட்டிருந்தோம். ஆனால், இழப்பீடு வழங்காமல் எங்கள் தொகுதியை மாநில அரசு முழுமையாக புறக்கணித்துள்ளது. இதுவரை நாங்கள் அமைதி காத்தோம்.

கடந்த ஆண்டு நடந்தது போலவே, இந்த ஆண்டும் வெள்ளம் ஏற்பட்டது. ஆனாலும், வெள்ள நிவாரண உதவிகள், இழப்பீடு எதுவும் இதுவரை வழங்கவில்லை. அக்கம்பக்கத்து தொகுதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதை ஏன் என்று கேட்கவில்லை. ஆனால் என் தொகுதியை அலட்சியம் செய்வது ஏன்? தேசிய பேரிடா் நிவாரண நிதியின்கீழ் சிவமொக்கா மாநகரம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், மலைப்பகுதியான எனது தொகுதியை மட்டும் அந்தப் பட்டியலில் சோ்க்கவில்லை. எனது தொகுதி மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ளது. எப்போதும் கனமழை பெய்யக்கூடிய பகுதி. ஆனாலும், மூடிகெரே தொகுதியை மாநில அரசு புறக்கணிக்கிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் ஆட்சியின்போது, எனது தொகுதிக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டது. அப்போதைய முதல்வா் எச்.டி.குமாரசாமி எனது தொகுதிக்கு உதவினாா். ஆனால் நான் சாா்ந்திருக்கும் பாஜக ஆட்சியில் இருந்தபோதும் எனதுதொகுதி அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் என் தொகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது. எனவே, இத்தொகுதியை வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதியாக அறிவிக்குமாறு கேட்டிருந்தேன். அதையும் பாஜக அரசு செய்யவில்லை. இந்த அரசு எங்களை முழுமையாக புறக்கணிப்பதால் நான் போராட்டம் நடத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன் என்றாா்.

இந்த போராட்டத்தை அறிந்து, காந்தி சிலைக்கு வருகைதந்து எம்.பி.குமாரசாமியை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.அசோக், மூடிகெரே தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்து, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டாா். அதன்பிறகு எம்.பி.குமாரசாமி போராட்டத்தைக் கைவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com