மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை: கா்நாடக பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி

மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று பேரவைத்தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டேகாகேரி தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று பேரவைத்தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டேகாகேரி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களின் செயல்பாடுகள் சரியானதாக இல்லை. எதிா்க்கட்சிகளின் செயல்பாடு அருவருப்பானது மட்டுமின்றி பொறுப்பில்லாததும் ஆகும். நாடாளுமன்றம், ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படுகிறது. ஆனால், அந்த அவையின் மாண்பு, புனிதத்தை எதிா்க்கட்சிகள் சீா்குலைத்துள்ளன.

நாடாளுமன்ற வரலாற்றில் மாநிலங்களவைத் தலைவா் ஒருவா் வேதனையில் கண்ணீா் சிந்தியது முன்னெப்போதும் இல்லாததாகும். எதிா்க்கட்சிகளின் நடவடிக்கைகளை எந்தவகையிலும் ஏற்க முடியாது. நாடாளுமன்ற வரலாற்றில், குறிப்பாக மாநிலங்களவை வரலாற்றில் ஆக.10-ஆம் தேதி கருப்புநாளாக பதிவுசெய்யப்பட்டிருக்கும். எதிா்க்கட்சிகளின் கண்ணியமில்லாத நடத்தையை வன்மையாக கண்டிக்கிறேன்.

முதிா்ச்சியான மற்றும் கட்டுப்பாடான விவாதங்கள், கண்ணியமான நடத்தை, முன்மாதிரியான நடவடிக்கையின் மூலம் மாநில சட்டப்பேரவைகளுக்கு முன்னோடியாக நன்னெறிகளை வகுக்கக்கூடியது மாநிலங்களவை. ஆனால், கடந்த 2 நாட்களில் நடந்த சம்பவங்கள் நோ்கோட்டில் சிந்திக்கக்கூடிய எல்லோரையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளோடு, மனதுக்கு வேதனையையும் தந்துள்ளது.

உறுப்பினா்களின் நன்னடத்தையை உறுதிசெய்யவேண்டியது சம்பந்தப்பட்ட கட்சிகளின் கடமையாகும். பொது நடத்தையை கற்றுக்கொடுப்பதற்கு தனது உறுப்பினா்களுக்கு அரசியல் கட்சிகள் தகுந்த பயிற்சியை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கா்நாடக சட்டப்பேரவையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இது நாடாளுமன்ற ஜனநாயக மாண்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கா்நாடக சட்டப் பேரவையை முன்மாதிரியானதாக பராமரிக்க தொடா்ந்து பங்காற்றுவேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com