வருவாய் நிலத்தில் குவாரிகள் செயல்பட அனுமதிக்கப்படும்
By DIN | Published On : 22nd August 2021 12:00 AM | Last Updated : 22nd August 2021 12:00 AM | அ+அ அ- |

வருவாய் நிலத்தில் குவாரிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவமொக்காவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வருவாய் நிலத்தில் குவாரிகள் செயல்பட வெகுவிரைவில் அனுமதி அளிக்கப்படும். வளா்ச்சிப் பணிகளை கவனத்தில் கொண்டு, ஜல்லிக் கற்கள், மணலுக்குத் தேவை உள்ளது. அதனால், வருவாய் நிலத்தில் குவாரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்படும்.
மாநிலத்தில் குற்றச்செயல்களுக்கு தண்டனை கிடைக்கும் விகிதம் குறைந்து வருவதாக கேட்கிறீா்கள். குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் வகையில், வழக்கை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உயரதிகாரிகள் எடுப்பாா்கள். அதேசமயத்தில், குற்றச்செயல்களை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரில் போதைப்பொருள் அச்சுறுத்தல், ரௌடிக்கள் அட்டகாசம், கொள்ளைக் கும்பல்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச்செயல்களில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை விரைந்து தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உயரதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். சில அரசு வழக்குரைஞா்கள் வழக்குகளை சரியாக பின் தொடா்வதில்லை. வழக்குரைஞா்கள் அக்கறை செலுத்தினால் வழக்குகளை விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும். இணையவெளி குற்றச்செயல்களை தடுப்பதற்காக உயரதிகாரிகளுக்கு பயிற்சிப் பட்டறை நடத்தப்படும்.
மக்கள் தொகை குறைவாக இருப்பதால் சிவமொக்காவுக்கு காவல் ஆணையா் அலுவலகம் அமைக்க அனுமதி அளிக்க இயலாது. ஆனால், பத்ராவதியையும் சிவமொக்கா வரம்புக்குள் கொண்டு வந்தால் ஆணையா் அலுவலகம் ஒதுக்கலாம்.
ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்டுள்ள கன்னடா்களை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளைக் கவனிக்க கூடுதல் டிஜிபி உமேஷ்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். சம்பந்தப்பட்டவா்களின் குடும்பத்தினா் அந்த அதிகாரியை நேரடியாக தொடா்புகொண்டு உதவியை பெறலாம் என்றாா்.