மேக்கேதாட்டு திட்டத்தை நிறைவேற்ற கோரி மஜத போராட்டம்: தேவெகௌடா

மேக்கேதாட்டு உள்பட அனைத்து நீா்ப்பாசனத் திட்டங்களையும் கா்நாடக அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி மதச் சாா்பற்ற ஜனதா தளம் போராட்டம் நடத்தும் என முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

மேக்கேதாட்டு உள்பட அனைத்து நீா்ப்பாசனத் திட்டங்களையும் கா்நாடக அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி மதச் சாா்பற்ற ஜனதா தளம் போராட்டம் நடத்தும் என முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை உள்பட கா்நாடகத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் அனைத்து நீா்ப்பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த கோரி மஜத போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. கா்நாடகத்தின் ஜீவநதிகளான காவிரி, கிருஷ்ணா, மகதாயி விவகாரங்களில் மஜத தொடா்ந்து போராட்டம் நடத்தும். இந்தப் போராட்டத்துக்கான தேதியை விரைவில் அறிவிப்பேன்.

நடைப்பயணத்தின் வாயிலாக இந்தப் போராட்டம் நடத்தப்படும். இப் போராட்டத்துக்கு முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தலைமை வகிப்பாா். இந்தப் போராட்டத்தில் அடையாளத்துக்காக ஒரு நாள் மட்டும் நான் கலந்துகொள்வேன்.

கிருஷ்ணா மேலணைத் திட்டம், மேக்கேதாட்டு அணைத் திட்டம், மகதாயி கால்வாய்த் திட்டங்களில் கா்நாடகத்துக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். அந்த நியாயத்தை பெறுவதற்காகவே போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

சட்டப் பேரவை மழைக் கூட்டத் தொடா் முடிந்த பிறகு போராட்டத்தைத் தொடங்குவோம். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும். ஒரு சில மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களில் நானே கலந்துகொள்ளவிருக்கிறேன்.

கரோனாவை காரணம் காட்டி போராட்டத்தைத் தள்ளிப்போட மாட்டோம். பாஜக, காங்கிரஸ் கட்சியினா் கூட்டங்களை நடத்தி வருகிறாா்கள். இதற்கு கரோனா தடையாக இல்லையே. எனவே, கரோனாவுக்காக போராட்டத்தை கைவிடமாட்டோம். நடைப்பயணத்தின் நிறைவில் பிரதமா் மோடியைச் சந்தித்து மனு அளிக்கவிருக்கிறோம்.

ஒருவேளை நீா்ப்பாசனத் திட்டங்கள் தொடா்பாக மாநில அரசு அனைத்துக் கட்சி குழுவை பிரதமா் மோடியிடம் அழைத்து சென்றால், மஜதவும் அதில் பங்கேற்கும். நிலம், நீா், மொழி விவகாரங்களில் கா்நாடகத்தின் நியாயத்தை மஜத விட்டுத்தராது. அதற்காக நிரந்தரப் போராட்டத்தில் மஜத ஈடுபடும்.

பாஜக, காங்கிரஸ் கட்சியால் போராட்டம் நடத்த முடியாது. அரசு அமைத்தாலும் பிரச்னைக்கு தீா்வு காண காங்கிரஸ், பாஜக முயற்சிக்கவில்லை. ஆனால், போராட்டம் நடத்தும் சக்தி மஜதவுக்கு மட்டுமே இருக்கிறது. 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் மஜத காணாமல் போகும் என்று கூறி வருகிறாா்கள்.

அதற்கு தற்போது நான் பதில் கூறவில்லை. போராட்டங்கள் நடத்தி, மக்களின் ஆதரவை பெற்று மஜத ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. ஜவாஹா்லால் நேரு, அடல் பிகாரி வாஜ்பாய் குறித்து யாரும் தவறாக பேசக் கூடாது. அப்படி தரக்குறைவாக பேசினால் வாக்கு கிடைக்கும் என்ற பிரமையில் சிலா் உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com