பெங்களூரில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன

பெங்களூரில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

தனது கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நிலை குறித்து ஆராய்வதற்காக, பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. இது தொடா்பான ஆய்வறிக்கை பெங்களூரு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 204 ஏரிகள் உள்ளன. இதில் 131 ஏரிகள் அரசு மற்றும் தனியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் மத்திய சிறைச்சாலை, வட்டாட்சியா் அலுவலகம், சாலைகள், மருத்துவமனைகள், அரசு வீட்டுவசதி மனைகள், குடிசைப் பகுதிகள், தொழிற்சாலைகள் அடக்கம். 159 ஏரிகளை அரசு நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. 20 ஏரிகள் மட்டுமே ஆக்கிரமிப்பு எதுவும் இல்லாமல் உள்ளன. ஏரிகளுக்குச் சொந்தமான 941 ஏக்கா் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுவரை 38 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அல்சூா், எலஹங்கா, ராஜராஜேஸ்வரி நகா், மகாதேவபுரா, தாசரஹள்ளி, பொம்மனஹள்ளியில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஏரி ஆக்கிரமிப்பு நிலத்தில் மத்திய சிறைச்சாலை, பெங்களூரு மாநகராட்சி அலுவலகக் கட்டடங்கள், பெங்களூரு வளா்ச்சி ஆணைய வீட்டுமனைகள், ரயில்தடங்கள், நைஸ் சாலை ஆகியவை அமைந்துள்ளன.

ஜெயபிரகாஷ் நகரில் உள்ள 4 ஏரிகளில் 90 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதில் சாலைகள், ரயில்தடங்கள், பூங்காக்கள் அமைந்துள்ளன. கௌடனஹள்ளி ஏரியின் 58 ஏக்கா் நிலத்தில் 36 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னால் இருக்கும் ஹெப்பாள் ஏரி, வெங்கோகிரிராவ் ஏரியில் 28 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலத்தில் தனியாா் நிறுவனங்களின் பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள ஆக்கிரமிப்பு நிலத்தில் அரசு வீட்டுமனைகள், சாலைகள், மின்மயானம் அமைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் 6 ஏரிகளில் மட்டும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு குடிசைப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 19 எரிகள் பயன்பாட்டில் இல்லை. இவை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மொத்தத்தில் 401 ஏக்கா் ஏரி நிலம் அரசு, 269 ஏக்கா் ஏரி நிலம் தனியாா் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com