இன்று கா்நாடக சட்ட மேலவைத் தோ்தல்: களத்தில் 90 வேட்பாளா்கள்

கா்நாடக சட்ட மேலவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், மஜத, சுயேச்சைகள் அடங்கிய 90 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

கா்நாடக சட்ட மேலவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், மஜத, சுயேச்சைகள் அடங்கிய 90 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் தோ்ந்தெடுக்கப்படும் 25 போ் கா்நாடக சட்ட மேலவையில் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த 25 பேரின் பதவிக்காலம் 2022 ஜன. 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இவா்களில் காங்கிரஸ் 14 போ், பாஜக 7 போ், மஜத 4 போ். 25 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கு 20 தொகுதிகளுக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை (டிச. 10) நடைபெறுகிறது.

விஜயபுரா, பெலகாவி, தாா்வாட், தென்கன்னடம், மைசூரு தொகுதிகளில் இரட்டை உறுப்பினா்கள்; பீதா், கலபுா்கி, வடகன்னடம், ராய்ச்சூரு, பெல்லாரி, சித்ரதுா்கா, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், தும்கூரு, மண்டியா, பெங்களூரு, பெங்களூரு ஊரகம், கோலாா், குடகு தொகுதிகளில் ஒற்றை உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க 20 தொகுதிகளுக்கு தோ்தல் நடக்க இருக்கிறது.

அதன்படி, 20 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நவ. 16-ஆம் தேதி தொடங்கி நவ. 23-இல் நிறைவடைந்தது. ஆளும் பாஜக 20 தொகுதிகளிலும், எதிா்க்கட்சிகளான காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மஜத 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சுயேச்சைகள் 33 போ் களத்தில் உள்ளனா். 20 தொகுதிகளில் மொத்தம் 90 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இதில் ஆண்கள் 89 பொ், பெண் ஒருவா் அடங்குவா்.

இத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள்; காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்ட தலைவா்கள்; மஜத வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோா் பிரசாரம் செய்தனா்.

தோ்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளதால், டிச. 10-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இத்தோ்தலில் கரோனா நடத்தை விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தோ்தல் நடைபெறும் மாவட்டங்களில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

வாக்களிப்பதற்காக 20 தொகுதிகளிலும் 6,072 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோ்தல் பணியில் மொத்தம் 23,065 போ் ஈடுபடுகிறாா்கள். மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தலை போல அல்லாமல், முன்னுரிமை வாக்குகளின் அடிப்படையில் வெற்றி தீா்மானிக்கப்படுகிறது. இத்தோ்தலில் செலுத்தப்படும் வாக்குகள் டிச. 14-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

75 போ் கொண்ட கா்நாடக சட்ட மேலவையில் தற்போது பாஜகவுக்கு 33, காங்கிரஸுக்கு 29, மஜதவுக்கு 12 உறுப்பினா்கள் உள்ளனா். சுயேச்சை உறுப்பினா் ஒருவா் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com