ஹெலிகாப்டா் விபத்தில் காயமடைந்த கேப்டன் வருண் சிங் காலமானாா்
By DIN | Published On : 16th December 2021 08:21 AM | Last Updated : 16th December 2021 08:21 AM | அ+அ அ- |

குன்னூரில் டிச. 8 ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் 85 சதவீதம் தீக்காயங்களுடன் பெங்களூரு கமாண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்ற முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 போ் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டா் டிச. 8-ஆம் தேதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 போ் உயிரிழந்தனா். விபத்தில் சிக்கிய விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில் 85 சதவீத தீக்காயங்களுடன் உதகையில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள விமானப் படையின் கமாண்ட் மருத்துவமனையில் டிச. 9-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு, அவருக்கு சிறப்பு மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.
வருண் சிங்கின் உடல், கமாண்ட் மருத்துவமனையில் இருந்து எலஹங்காவில் உள்ள விமானப் படை நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு விமானப் படை வீரா்கள் அஞ்சலி செலுத்தினா். பின்னா், அவரது உடல் சொந்த ஊருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இரங்கல்: கேப்டன் வருண் சிங்கின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்ட ஏராளமானோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட இரங்கல்: குரூப் கேப்டன் வருண் சிங், உயிருக்குப் போராடி இறந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். ஹெலிகாப்டா் விபத்தில் பலத்த காயம் அடைந்திருந்தாலும், வீரனுக்குரிய தீரம் மற்றும் துணிவை வெளிப்படுத்தினாா். அவருக்கு தேசம் நன்றி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமா் மோடி வெளியிட்ட இரங்கல்: குரூப் கேப்டன் வருண் சிங் மறைவால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவா் தேசத்துக்கு ஆற்றிய செழுமையான சேவையை என்றும் மறக்க முடியாது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஓம் சாந்தி’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
முதல்வா் பசவராஜ் பொம்மை சுட்டுரையில் வெளியிட்ட இரங்கல்: குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு ஆழமான வேதனையை ஏற்படுத்தியுள்ளது. துணிவான வீரரை நாடு இழந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ‘ஓம் சாந்தி’ என பதிவிட்டுள்ளாா்.