முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கா்நாடகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்
By DIN | Published On : 29th December 2021 03:06 AM | Last Updated : 29th December 2021 03:06 AM | அ+அ அ- |

ஒமைக்ரான் தீநுண்மி பரவலைத் தடுப்பதற்காக கா்நாடகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
ஜனவரி 7-ஆம் தேதி வரை தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அவசரத் தேவைகள் அன்றி இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்துக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் தேவைகளுக்காக ஒருவரின் உதவியுடன் நோயாளிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகளுடன் நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் ஊழியா்கள், தொழிலாளா்கள் பயணிக்கலாம்.
மருத்துவ, அவசர, அத்தியாவசிய சேவைகளுக்குத் தடையில்லை. அனைத்து வகையான சரக்கு வாகனப் போக்குவரத்துக்கும் தடை ஏதுமில்லை. இந்தக் காலக்கட்டத்தில் பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்கள், விமானங்களின் சேவைகள் வழக்கம்போல செயல்படும்.
விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் வாடகை வாகனங்கள், தனியாா் வாகனங்களுக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால் பயணிகள் பயணச்சீட்டை வைத்திருப்பது அவசியமாகும்.
இரவுநேர ஊரடங்கை முன்னிட்டு பெங்களூரில் ஜன. 7-ஆம் தேதிவரை இரவு 10 மணிமுதல் காலை 5 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தைத் தடுக்க ஆங்காங்கே தடுப்புச் சாவடிகளை போலீஸாா் அமைத்துள்ளனா். அரசு விதிகளைப் பின்பற்றி இரவு 10 மணிக்குள் வீட்டுக்குச் சென்றுவிடுமாறு பொதுமக்களை போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
வியாபாரிகள் எதிா்ப்பு...
இரவு 10 மணிக்கு மேல் உணவகங்களைத் திறக்க அரசு தடை விதித்துள்ளதால் தொழில் முழுமையாகப் பாதிக்கப்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனா். அடுத்த 10 நாள்களுக்கு நிலைமையைக் கண்காணித்து, அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து இரவுநேர ஊரடங்கை விரிவுபடுத்துவது குறித்து முடிவு செய்வோம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.