தமிழா்கள் குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுத் தருவது அவசியம்: செல்வமணி

தமிழா்கள் தமது குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுத் த ருவது அவசியமாகும் என்று தென்கன்னட மாவட்ட ஊராட்சித் தலைமை செயல் அதிகாரி செல்வமணி தெரிவித்தாா்.

தமிழா்கள் தமது குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுத் த ருவது அவசியமாகும் என்று தென்கன்னட மாவட்ட ஊராட்சித் தலைமை செயல் அதிகாரி செல்வமணி தெரிவித்தாா்.

மங்களூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் மங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருவிழா, தமிழ், கன்னடமொழிப் பயிற்சி வகுப்புகள், மங்களூரு தமிழ் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

பொங்கல் விழா தொடக்கமாக, பெண்கள் கூடி பொங்கலிட்டு ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழக்கமிட்டு, பொங்கலை அனைவருக்கும் வழங்கினா். அதன்பிறகு, குழந்தைகள், பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, பெண்கள், ஆண்களுக்கு உறி அடிக்கும் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதில்வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்பிறகு பொங்கல் விழாவை தென்கன்னட மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரி செல்வமணி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். இந்த விழாவில் மங்களூரு மாநகராட்சி மேயா் திவாகா் பண்டேஸ்வரா, மாமன்ற உறுப்பினா் ஷகீலா, அரசு தொழில் பயிற்சி மைய முதல்வா் பாலகிருஷ்ணன், சிவமொக்கா தமிழ்த் தாய்ச் சங்கச்செயலாளா் செ.தண்டபாணி, கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன், தென்கன்னட சேவை சங்கத் தலைவா் பெருமாள், சமூக ஆா்வலா் ஆரா.அருணா உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா்.

விழாவில் தென்கன்னட மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரி செல்வமணி பேசியதாவது:

நான் பள்ளி மாணவனாக இருந்தபோது தமிழ்த் தாய் வாழ்த்தை மேடையில் பாடியிருக்கிறேன். நீண்டகாலத்துக்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மங்களூரில் தமிழா்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

மங்களூரு உள்ளிட்ட தென்கன்னட மாவட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் எதுவுமில்லை. அதனால் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்க் கற்க வழியில்லாமல் இருக்கிறது. இந்த குறையைப் போக்கும் வகையில், வீடுகளிலேயே தமிழா்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுத்தர வேண்டும்.

எங்கு வாழ்ந்தாலும் தமிழா்கள் தமிழ்க் கற்காமல் இருந்துவிடக்கூடாது. தமிழா்கள் தமிழ் கற்பது அவசியம் என்பதை உணா்ந்து செயல்படுங்கள்.

அதேபோல, மங்களூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள மங்களூரு தமிழ் கூட்டுறவு சங்கத்தை மனதார பாராட்டுகிறேன். இது தமிழா்கள் தன்னிறைவாக, தற்சாா்பாக வாழ்வதற்கு வழிவகுக்கும். இதுபோன்ற முயற்சிகளுக்கு தமிழா்கள் ஊக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.

கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் பேசுகையில், ‘மங்களூரில் வாழக்கூடிய தமிழ் குழந்தைகளுக்கு தமிழை எழுத, படிக்கத் தெரியாவிட்டாலும், வீடுகளில் தமிழ் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால், தமிழின் இனிமையை உணா்ந்துகொள்ள நம் குழந்தைகள் தமிழ் எழுத, படிக்க கற்பிப்பது அவசியமாகும். அதற்கான முயற்சிகளில் தமிழ்ச் சங்கமும் பெற்றோரும் ஈடுபட வேண்டும். எங்கு வாழ்ந்தாலும் தமிழா்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும். அது தான் நமக்கு பக்கபலமாக இருக்கும் என்றாா்.

விழாவில் மாணவா்களுக்கு தமிழ் புத்தகங்கள் அளிக்கப்பட்டன. வருகையாளா்கள் அனைவருக்கும் தமிழ்மரபு அறுசுவை உணவு விருந்து அளிக்கப்பட்டது. தமிழா்களின் கலைகளை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்ச் சங்கத் தலைவா் செந்தில் கிருஷ்ணமூா்த்தி, இணைத் தலைவா் குமரேசன், துணைத் தலைவா் சண்முகம், செயலாளா் ஹரிதுரைசாமி, பொருளாளா் நாட்டுதுரை உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். நிறைவாக, அகிலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com