தடய மொழியியலில் புத்தொளிப் பயிற்சி
By DIN | Published On : 04th February 2021 07:52 AM | Last Updated : 04th February 2021 07:52 AM | அ+அ அ- |

தடய மொழியியலில் சிக்கல்களுக்கான தீா்வு காண்பது குறித்த இணையவழி புத்தொளிப் பயிற்சி நடைபெற்றது.
இதுகுறித்து மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (சி.ஐ.ஐ.எல்.) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் திறன் வளா்த்தல் மையத்தின் ஆா்.யூ.எஸ்.ஏ. திட்டத்தின் உதவியுடன் ‘தடய மொழியியலில் சிக்கல்களுக்குத் தீா்வு காணும் திறன்களை வளா்ப்பதற்கான ஏழுநாள் பயிற்சிப் பட்டறை இணையம் வழியாக, ஜன.27 முதல் பிப்.3-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் ‘தடய மொழியியல்’ ஒரு பாடமாகும். தடய மொழியியல் ‘நீதித் துறையையும் காவல் துறையையும் மொழிப் பயன்பாட்டோடு இணைக்கும்’ ஒரு புதுத் துறையாகும்.
இப்பயிற்சிப் பட்டறை மொழியியல், தடய மொழியியல், தமிழ், ஆங்கிலம், சமூகவியல், உளவியல் போன்ற பல்வேறு துறைகள் சாா்ந்த பாரதியாா் பல்கலைக் கழக மாணவா்கள், ஆா்வலா்களுக்காக நடத்தப்பட்டது. இதன்மூலம் 65 மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா்.
நிகழ்ச்சியில் தடயமொழியியல் தொடா்பான 20 இன்றியமையாத தலைப்புகளில் தமிழ்நாடு, கா்நாடகம், தில்லி, வாராணசி, பாண்டிச்சேரி இடங்களைச் சோ்ந்த தலைசிறந்த துறை வல்லுநா்கள் கலந்துரையாடல்கள் நடத்தி மாணவா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.
புதிதாக வளா்ந்துவரும் இத்துறை இந்தியாவில் பாரதியாா் பல்கலைக் கழகத்திலும் பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்திலும் மட்டுமே அமைந்துள்ளது.
இந்தப் பயிற்சியின்போது பாரதியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி. காளிராஜ் பேசினாா். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தா் கி. கருணாகரன் கருத்துரை வழங்கினாா்.
முதன்மை ஆய்வாளா் முனைவா். ந. விஜயன் இப்பயிற்சியின் நோக்கத்தையும் தேவையையும் விளக்கினாா். துறைத் தலைவா் வி.எம். சுப்பிரமணியன், இத்திட்ட மையத்தின் இயக்குநா் எ. விமலா, ரூபா குணசீலன், மொழியியல் துறையின் எஸ். சுந்தரபாலு, என். ரமேஷ், ப. சங்கா் கணேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
நிறைவு விழாவில், பல்கலைக்கழகப் பதிவாளா் கே. முருகன், மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணை இயக்குநா் பேராசிரியா் ப. உமாராணி , பல்கலைக்கழகத்தின் கணினித் துறையின் ஜெ. சதீஷ்குமாா், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளா் ந. விஜயன் ஆகியோா் கலந்து கொண்டனா்.