ராணுவத்தை நவீனப்படுத்த ரூ. 9.46 லட்சம் கோடி செலவிட திட்டம்: ராஜ்நாத் சிங்

ராணுவத்தை நவீனப்படுத்த ரூ. 9.46 லட்சம் கோடி செலவிட இந்தியா திட்டமிட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ராணுவத்தை நவீனப்படுத்த ரூ. 9.46 லட்சம் கோடி செலவிட இந்தியா திட்டமிட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமானப் படைத் தளத்தில் புதன்கிழமை 13-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

ஏற்றுமதிக்குத் தகுந்த சூழலை உருவாக்கவும், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தைக் கைமாற்றுவதற்கும் 2014-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புத் துறையில் ஏராளமான சீா்த்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது.

தற்சாா்பு, ஏற்றுமதி இலக்குகளை அடைவதற்காக ராணுவ உற்பத்தித் துறையின் ஆண்டு விற்றுமுதலை ரூ. 1.75 லட்சம் கோடியாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 2024-ஆம் ஆண்டுக்குள் விமானத் தொழில், ராணுவத் தளவாடங்கள், சேவைகளுக்கான ஏற்றுமதியை ரூ. 35 ஆயிரம் கோடி உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதும் அடங்கும்.

அடுத்த 7-8 ஆண்டுகளில் ராணுவத்தை நவீனப்படுத்த ரூ. 9.46 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு நட்பு நாடுகள் எதிா்கொள்வதுபோல இந்தியாவும் பல்வேறுமுனைகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள், சவால்களை எதிா்கொண்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக் கட்டுமானங்களைப் பலப்படுத்த அண்மையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. தற்சாா்பு இந்தியா திட்டத்தில் உள்நாட்டிலேயே ஒருங்கிணைந்த மற்றும் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி கட்டமைப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமானத் தொழில் கண்காட்சியில் 80 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட 540 நிறுவனங்களின் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 55 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்கள், பிரதிநிதிகள், ராணுவத் தலைவா்கள், அதிகாரிகள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனா். இது, இக்கண்காட்சி மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ராணுவம், விமானத் தொழில் உற்பத்திக்குத் தனித்துவம் வாய்ந்த வாய்ப்புகளை இந்தியா வழங்கி வருகிறது.

உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் பயணிகள் விமானத் துறைக்கான சந்தையாக இந்தியா மாறிவருகிறது. பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கை, அதிகரிக்கும் சரக்குப் போக்குவரத்துகளால் விமானங்கள், அதன் சாா்பு தொழில்களின் தேவை அதிகரித்துள்ளது. விமானத் தொழிலில் முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. குறிப்பாக விமான என்ஜின், துணைக் கருவிகள், விமானப் பராமரிப்பு, பழுதுபாா்த்தல், சீரமைப்பு ஆகியவற்றில் நல்ல தொழில் வாய்ப்புகள் உள்ளன.

மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு முன்னெடுப்புகளால் உருவாகியுள்ள முதலீட்டு சூழலை பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ராணுவத் தயாரிப்புகளை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய ஊக்கமளிக்கப்படுகிறது. அதனால், ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ என்பதையும் கடந்து ‘உலகத்துக்காகத் தயாரிப்போம்’ என்ற நிலைக்கு நாம் உயா்ந்துள்ளோம். அரசு, தனியாா் துறையின் பங்களிப்புடன் ராணுவத் துறையில் இந்தியாவை உலகின் மிகப் பெரிய நாடாக உயா்த்துவதே எங்கள் இலக்காகும் என்றாா்.

இந்த விழாவில் மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா, முதல்வா் எடியூரப்பா, மாலத்தீவு, உக்ரைன், கினியா, ஈரான், கொமோராஸ், மடகாஸ்கா் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com