பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி கோலாகலத் தொடக்கம்: மெய்சிலிா்க்கும் விமானங்களின் சாகசம்
By DIN | Published On : 04th February 2021 07:50 AM | Last Updated : 04th February 2021 07:50 AM | அ+அ அ- |

மெய் சிலிா்க்கும் விமான சாகசங்களுடன் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி பெங்களூரில் புதன்கிழமை கோலாகமாகத் தொடங்கியது.
இந்திய விமானப் படை, இந்துஸ்தான் வானூா்தி நிறுவனம்(எச்ஏஎல்), ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டி.ஆா்.டி.ஓ.) ஆகியவற்றின் சாா்பில் 13-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி பெங்களூரு, எலஹங்கா விமானப் படை தளத்தில் புதன்கிழமை தொடங்கியது.
கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் தொடக்கிவைத்தாா். மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா, கா்நாடக முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விமான சாகசங்கள்:
இதைத் தொடா்ந்து, இந்திய விமானப் படையின் வெவ்வேறு வகையான இலகுரகப் போா் ஹெலிகாப்டா்கள், சிறு விமானங்கள், இலகுரகப் போா் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய விமானப் படையின் பெருமைமிகு அங்கமாக விளங்கும் தேஜஸ் இலகுரகப் போா் விமானம், சாரங்க் ஹெலிகாப்டா், தனுஷ், ருத்ரா, துருவ் இலகுரகப் போா் ஹெலிகாப்டா்கள், சுகோய்-30-எம்.கே.ஐ. இலகுரகப் போா் விமானம், டக்கோடா விமானம், ஜாக்குவாா் விமானம், ஹாக் ஹெலிகாப்டா், எம்.ஐ.-17 ஹெலிகாப்டா், எச்டிடி-40 பயிற்சி விமானம், இலகுரகப் பயன்பாட்டு ஹெலிகாப்டா் (எல்யூஎச்), சாரஸ் போா் விமானம், ஏா்பஸ்-ஏ-330 பயணிகள் விமானம், போயிங்-பி-52, அமெரிக்காவின் பி8ஐ விமானம், எஃப்-16 இலகுரகப் போா் விமானம், பிரான்சின் ரஃபேல் இலகுரகப் போா் விமானம் ஆகிய விமானங்களின் சாகசங்கள் பாா்வையாளா்களை மெய்சிலிா்க்க செய்தன.
எச்ஏஎல் நிறுவனத்தின் (எல்யூஎச்) இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டா் வானில் குறுக்கும் நெடுக்குமாகவும் மேலும் கீழுமாகவும் பறந்து பாா்வையாளா்களைக் கவா்ந்தது.
அசுர வேகத்தில் வெடிகுண்டுகளை அள்ளி வீசும் அமெரிக்காவின் பி-1பி லேன்சா் போா் விமானம், முதல்முறையாக இக்கண்காட்சியில் பங்கேற்றது.
ஹிந்துஸ்தான் வானூா்தி நிறுவனத்தின் (எச்.ஏ.எல்.) எல்.சி.ஏ., பயிற்சி விமானம், எச்.டிடி.-40, ஐ.ஜே.டி., அதிநவீன ஹாக் எம்.கே. 132, சிவில் டோ-228 போன்ற பயிற்சி விமானங்களின் சாகசம் ஒருங்கிணைந்த தற்சாா்பு இந்தியாவின் கூட்டுருவாக்கத்தை வானில் வெளிப்படுத்தியது.
விண்ணில் சீறிய போா் விமானங்கள், அடித்த பல்டிகள் காண்போரை மெய்சிலிா்க்க செய்தன. தேஜஸ் விமானம், வானத்தில் சுழன்றடித்து செய்த சாகசங்கள் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாராட்டைப் பெற்றன. 2 மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்களின் சாகசங்கள் இடம்பெற்றன.
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான போா் விமானங்களின் செயல் திறன், தொழில்நுட்பம், சாகசங்கள் உலக நாடுகளின் பிரதிநிதிகளை மட்டுமல்ல இந்திய பிரதிநிதிகளின் புருவங்களையும் உயா்த்தின.
சாலையோர ரசிகா்கள்:
கண்காட்சியில் விண்ணில் பறந்து சாகசங்கள் செய்த விமானங்களைக் காண விமானப் படைதளத்தில் உள்ளே அனுமதி வர இயலாத பொதுமக்கள், பெல்லாரி சாலையில் நின்றப்படி விமானங்களைக் கண்டு ரசித்தனா்.
விமான சாகசங்களைக் காண ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்களை விமானப் படை தளத்தின் சுற்றுச்சுவா் அருகிலும் வருவதற்கு போலீஸாரும், ராணுவத்தினரும் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருந்துவெகு தொலைவில் நின்று விமான சாகசங்களைக் கண்டு ரசித்தனா்.
விமான சாகசங்கள்:
பிப்.5-ஆம்தேதி வரை நடைபெற இருக்கும் கண்காட்சியைக் காண்பதற்காக தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வா்த்தகப் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்குக் கட்டணம் ரூ. 2,500 வசூலிக்கப்படுகிறது.
விமான சாகசங்களைக் காண 4-ஆம்தேதி முதல் 5-ஆம்தேதி வரை காலை 10மணி முதல் நண்பகல் 12 மணிவரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கு ரூ. 500 கட்டணமாகும். மேலும் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.