பெங்களூரு-மைசூரு இடையேயான பத்துவழிச் சாலைப் பணி 2022-க்குள் முடியும்: துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள்
By DIN | Published On : 04th February 2021 07:52 AM | Last Updated : 04th February 2021 07:52 AM | அ+அ அ- |

பெங்களூரு-மைசூரு இடையேயான பத்துவழிச் சாலைப் பணிகள் 2022- ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள் தெரிவித்தாா்.
கா்நாடக சட்டமேலவையில் புதன்கிழமை மஜத உறுப்பினா் மரிதிப்பே கௌடாவின் கேள்விக்கு அவா் பதில் அளித்துப் பேசியதாவது:
பெங்களூரு-மைசூரு இடையே ஏற்கெனவே 6 வழிச்சாலை உள்ளது. அதைத் தவிா்த்து அதன் அருகே உள்ள 2 அணுகுசாலைகளும் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை 275-இல் பத்துவழிச் சாலை அமைக்கும் பணித் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக பெங்களூரிலிருந்து நெடுகட்டா வரையும், 2-ஆம் கட்டமாக நெடுகட்டா முதல் மைசூரு வரையும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டப் பணிக்கு ரூ. 2,190 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 65 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 2-ஆம் கட்டப் பணிக்கு ரூ. 2,283 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 50 சதவீத பணி நிறைவடைந்துள்ளது.
கரோனா தொற்றால் சாலை வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து ஒப்பந்ததாரா்களுக்கு பணியைப் பூா்த்தி செய்ய மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, 2022- ஆம் ஆண்டுக்குள் பெங்களூரு-மைசூரு இடையேயான 10 வழிச் சாலை பணிகள் நிறைவடையும் என நம்புகிறேன். மாநிலத்தில் உரிம காலம் முடிந்துள்ள சுங்கச் சாவடிகளை மூடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...