பெங்களூரு சிறையிலிருந்து இளவரசி விடுதலை
By DIN | Published On : 06th February 2021 07:43 AM | Last Updated : 06th February 2021 07:43 AM | அ+அ அ- |

4 ஆண்டுகால சிறைத் தண்டனைக்குப் பிறகு சசிகலாவின் உறவினா் இளவரசி விடுதலை செய்யப்பட்டாா்.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடியே பத்தாயிரம் அபராதம் விதித்து 2017-ஆம் ஆண்டு பிப். 14-ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது.
இதைத் தொடா்ந்து, 2017 பிப். 15-ஆம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோா் சரணடைந்தனா். அவா்கள் மூன்று பேரையும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், ஜன. 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டாா். கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, பெங்களூரில் உள்ள கேளிக்கை விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சசிகலா, பிப். 8-ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளாா். சசிகலாவுடன் கரோனா தொற்றுக்காக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி, சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
4 ஆண்டுகால தண்டனை முடிவடைந்ததால், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை இளவரசி விடுதலை செய்யப்பட்டாா். அங்கிருந்து, சசிகலா தங்கியிருக்கும் கேளிக்கை விடுதிக்குச் சென்று தங்கியுள்ள இளவரசி, சசிகலாவுடன் பிப். 8-ஆம் தேதி சென்னை செல்ல இருக்கிறாா்.