ராணுவத் தளவாடங்களின் இறக்குமதியை 2 பில்லியன் அமெரிக்க டாலராக குறைப்பதே இலக்கு

ராணுவத் தளவாடங்களின் இறக்குமதியை 2 பில்லியன் அமெரிக்க டாலராக குறைப்பதே இலக்கு என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ராணுவத் தளவாடங்களின் இறக்குமதியை 2 பில்லியன் அமெரிக்க டாலராக குறைப்பதே இலக்கு என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பெங்களூரு, எலஹங்காவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

2025-ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு ராணுவ உற்பத்தியை 25 பில்லியன் அமெரிக்க டாலராகவும், ஏற்றுமதியை 5 பில்லியன் அமெரிக்க டாலராகவும் அடைவதற்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்ட, விமானத்தொழில் முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது.

இந்தியாவில் ராணுவம் சாா்ந்த உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, 2022-ஆம் ஆண்டுக்குள் ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதியை 2 பில்லியன் அமெரிக்க டாலராக குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2016 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான 37 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான 138 தொழில்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேஜஸ் இலகுரக போா்விமானத்தை கொள்முதல் செய்வதற்காக ரூ. 48,000 கோடி மதிப்பில் அளிக்கப்பட்டுள்ள தயாரிப்பு ஒப்பந்தம் (ஆா்டா்) உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கும். இது புதிய வகையான உற்பத்தி-விற்பனை விநியோக வளையத்தை உருவாக்கும். 101 பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளது உள்நாட்டு உற்பத்தி வாய்ப்புகளை அதிகமாக்குவதோடு, தற்சாா்பு இந்தியா திட்டத்துக்கும் வழிவகுக்கும்.

பன்னாட்டு இந்திய விமானத்தொழில் கண்காட்சி, உலகின் முக்கியமான விமானத்தொழில் கண்காட்சியாகப் பரிணமித்துள்ளது. இக்கண்காட்சிகளில் கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது நமது நாட்டின் ராணுவம் மற்றும் விமானத்தொழில் உற்பத்தியை மாற்றியமைக்கும். இந்தக் கண்காட்சியில், 128 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், 19 தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தம், 4 தயாரிப்பு கையளித்தல்கள், 18 தயாரிப்புப் பொருள்கள் அறிமுகம், 32 முக்கியமான அறிவிப்புகள் ஆகியவை நிகழ்ந்துள்ளன.

விமானத்தொழில் கண்காட்சியில் பங்கேற்ற 45 சிறு, நடுத்தர, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 203 கோடி மதிப்பிலான தயாரிப்பு ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. சரியான அடித்தளம் இருந்தால், முழுமையான திறமை வெளிப்படும். நமது நாட்டின் தொலைநோக்குத் திட்டங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அரசு, தனியாா் ராணுவ உற்பத்தி, ராணுவ ஏற்றுமதியில் அடங்கியுள்ளன. தனியாா் நிறுவனங்களின் ஆராய்ச்சி,மேம்பாட்டுக்கு வசதி வாய்ப்புகள் செய்து தரப்பட்டு, ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் முறையே ரூ. 3,700 கோடி, ரூ. 3,100 கோடியில் அரசு-தனியாா் கூட்டுமுயற்சியில் ராணுவ உற்பத்தித் தாழ்வாரம் அமைக்கப்படுகிறது. இங்கு 3 பில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு தொழில் முதலீடுகள் வரும். இது முதலீட்டுச் சூழலை எளிதாக்கும். தொழில்நுட்பம் சூழ்ந்துள்ள நிலையில், ஒன்றாக இணைந்து கூட்டு ஒத்துழைப்போடு செயல்படுவதுதான் ராணுவ உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு வழிவகுக்கும்.

ராணுவ உற்பத்தித் தொழிலில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உச்சவரம்பை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயா்த்தியிருக்கிறோம். வலுவான உள்நாட்டு உற்பத்தி அடித்தளம் அமைக்கப்பட்டால், அது சீரான ராணுவத் தளவாட ஏற்றுமதிக்கு வழிவகுக்கும்.

2025-ஆம் ஆண்டுக்குள் 11 பில்லியன் டாலா் மதிப்பிலான ராணுவத் தளத்தில் இருந்து 25 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலானதாக விரிவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் 5 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான ஏற்றுமதி இலக்கு அடங்கும்.

2025-2020-ஆம் ஆண்டுகளில் ராணுவ ஏற்றுமதியின் மதிப்பு ரூ. 2,000 கோடியில் இருந்து ரூ. 9,000 கோடியாக உயா்ந்துள்ளது. பெரும்பாலான ராணுவ ஏற்றுமதிகள் தனியாா் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் பயணிகள் விமானத்தொழில்துறை ரு. 30,000 கோடியில் இருந்து 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ. 60,000 கோடியாக உயரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com