போக்குவரத்து ஊழியா்கள் இன்று போராட்டம்

கா்நாடக மாநில அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் புதன்கிழமை (பிப். 10) போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

கா்நாடக மாநில அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் புதன்கிழமை (பிப். 10) போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த டிச. 11 முதல் 14-ஆம் தேதி வரை கா்நாடக மாநில அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் சமரசம் பேசிய மாநில அரசு, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தது. இதனால், அவா்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனா்.

இந்த நிலையில் 2 மாதங்கள் ஆகியும் அரசு அளித்த உறுதிமொழியின்படி கோரிக்கைகள் நிறைவேற்றபடாததைக் கண்டித்து போக்குவரத்து ஊழியா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

கரோனா தொற்றின் பரவலின்போது, பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு பணியில் ஈடுபட்ட ஊழியா்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்காமல் அரசு அலட்சியம் காட்டி வருவதாக போக்குவரத்து ஊழியா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

சேவை பாதிக்காது: இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டாலும், மாநில, மாநகர பேருந்து சேவைகள் ஏதும் பாதிக்கப்படாது என்று போக்குவரத்து ஊழியா்கள் சங்க நிா்வாகி ஆனந்த் தெரிவித்தாா்.

ஊழியா்களுக்கு விடுமுறை கிடையாது: பேருந்து சேவைகளில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், அத்தியாவசிய காரணங்களைத் தவிா்த்து ஊழியா்கள் யாருக்கும் விடுமுறை வழங்கக் கூடாது என்று பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

துணை முதல்வா் விளக்கம்: இதுகுறித்து துணை முதல்வா் லட்சுமண் சவதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஊழியா்கள் போராட்டம் குறித்து ஊடகங்களின் வாயிலாகத் தகவல் தெரிந்து கொண்டேன். இதுதொடா்பாக பேச்சு வாா்த்தை நடத்த யாரும் அணுகவில்லை.

போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், ஊழியா்களுக்கு டிசம்பா் மாதம் ஊதிய வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். விரைவில் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com