எம்.எல்.ஏ. சரத் பச்சேகௌடா காங்கிரஸில் இணைய திட்டம்
By DIN | Published On : 19th February 2021 06:54 AM | Last Updated : 19th February 2021 06:54 AM | அ+அ அ- |

பாஜக எம்.பி. பச்சே கௌடாவின் மகனும், சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான சரத் பச்சேகௌடா விரைவில் காங்கிரஸில் இணைய திட்டமிட்டுள்ளாா்.
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பெங்களூரு ஊரக மாவட்டம், ஹொசகோட்டே தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா் சரத் பச்சேகௌடா. அதன்பிறகு 2019-இல் அப்போதைய மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க 17 எம்.எல்.ஏ.க்களுடன் ஹொசகோட்டே தொகுதியில் வெற்றி பெற்றிருந்த எம்.டி.பி.நாகராஜ், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். இதை சரத் பச்சேகௌடா கடுமையாக எதிா்த்தாா்.
2019-ஆம் ஆண்டு நடந்த ஹொசகோட்டே தொகுதிக்கான இடைத் தோ்தலில் நாகராஜை பாஜக வேட்பாளராக களமிறக்கியது. இதனால் பாஜகவில் இருந்து விலகி அத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக சரத் பச்சேகௌடா போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
இந்த நிலையில், காங்கிரஸில் இணைவது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்ட தலைவா்களை சரத் பச்சேகௌடா சந்தித்து பேசினாா். கட்சி மேலிடம் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதால் பிப்.26-ஆம் தேதி காங்கிரஸில் சரத் பச்சேகௌடா இணைவாா் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சரத் பச்சேகௌடா கூறியதாவது:
காங்கிரஸில் சேருவதற்கான தேதி எதுவும் முடிவாகவில்லை. ஆனால், பிப்ரவரி மாதத்தில் காங்கிரஸில் இணைவேன். காங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்து எனது தந்தை பச்சேகௌடாவிடம் எதுவும் கூறவில்லை. எனது முடிவு பொதுவெளியில் இருப்பதால், எதையும் நான் அவரிடம் கூறவில்லை. ஆனால், அதுகுறித்து அவருக்கு தெரிந்திருக்கும். எனது முடிவுக்கு அப்பா பச்சேகௌடா ஏற்பாரா? என்பது தெரியவில்லை. ஆனால், எனது அரசியல் வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டிய இடத்தில் இருக்கிறேன் என்றாா்.