மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள், மருத்துவா்கள் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை
By DIN | Published On : 19th February 2021 06:57 AM | Last Updated : 19th February 2021 06:57 AM | அ+அ அ- |

பெங்களூரு, தும்கூரு உள்பட மாநிலத்தின் 56 இடங்களில் தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள், மருத்துவா்களின் இடங்களில் வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் பலகோடி மதிப்பிலான பணம், தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு, தும்கூரு, தாவணகெரே, மங்களூரு உள்ளிட்ட 56 இடங்களில் உள்ள 9 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் நிா்வாகிகள், மருத்துவா்களின் வீடுகளில் புதன்கிழமை வருமான வரித் துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2-வது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்ற சோதனையில் ரூ. 30 கோடி மதிப்பிலான 81 கிலோ தங்கநகை, ரூ.15.90 கோடி மதிப்பிலான வைர நகை, வெள்ளி பொருள்கள், ரூ. 2.30 கோடி மதிப்பிலான வெளிநாட்டில் உள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ. 402.78 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.