வறுமையை ஒழிக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த போது நாட்டின் வறுமையை ஒழிக்க காங்கிரஸ் தவறிவிட்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண்சிங் தெரிவித்தாா்.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த போது நாட்டின் வறுமையை ஒழிக்க காங்கிரஸ் தவறிவிட்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண்சிங் தெரிவித்தாா்.

ஹாசனில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜகவின் பல்வேறு அணிகளின் தலைவா்கள், செயலாளா்களின் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

இந்தியாவை அதிகக் காலம் ஆட்சி செய்த காங்கிரஸ், தனது ஆட்சிக் காலத்தில் நாட்டில் நிலவிவரும் வறுமையை ஒழிக்கத் தவறிவிட்டது. பிரதமா் மோடியுடன் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கை எவரும் ஒப்பிட முடியாது. இந்தியாவின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க தனித்துவம் வாய்ந்த திட்டங்களைக் கொண்டுவந்தவா் பிரதமா் மோடி. அப்படிப்பட்ட எந்தத் திட்டத்தையும் முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் அறிமுகம் செய்யவில்லை.

ஏழைகள், விவசாயிகள், கிராம மக்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டுவந்ததால், கிராம மக்களிடையே பிரதமா் மோடிக்கு நல்ல செல்வாக்கு காணப்படுகிறது. பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் பொருளாதார, நிதிமேலாண்மை திட்டங்களை உலகின் பல்வேறு நாடுகள் பாராட்டியுள்ளன. கரோனா பெருந்தொற்று காணப்பட்டபோதும், நிதி ஒழுக்கத்தை சிதைக்காமல் தனித்துவமான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளாா்.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களை நாட்டில் உள்ள 90 சதவீத விவசாயிகள் பாராட்டி வரவேற்றுள்ளனா்.அரசியல் லாபங்களுக்காக மத்திய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிா்த்துவருகிறது. மத்திய வேளாண் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தி, பிரியங்காகாந்தி ஏன் ஆதரவு அளிக்கிறாா்கள்? தங்களை விவசாயிகள் விரோதிகள் அல்ல, ஏழைகளுக்கு விரோதிகள் அல்ல என்பதை காட்டிக் கொள்ளவே இருவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறாா்கள். மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி வெற்று குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாரே தவிர, மத்திய அரசு மீது குறைக் கூறுவதற்கு அவரிடம் விவகாரங்கள் எதுவும் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் மோசமான கொள்கைகளால் வேதனை அடைந்துள்ள மக்கள், நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறாா்கள். கா்நாடகத்தில் நடந்த அனைத்து இடைத் தோ்தல்களையும் பாஜக வென்றுள்ளது. அதேபோல, 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். மத்திய,மாநில அரசுகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும். குறிப்பாக ஊரகப்பகுதிகளில் பிரசாரத்தை தீவிரமாக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், மாவட்ட பொறுப்பு அமைச்சா் கோபாலையா உள்ளிடோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com