இட ஒதுக்கீடு: பெங்களூரில் பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினா் பேரணி

பிற்படுத்தப்பட்டோா் பட்டியலின் 2-பி உட்பிரிவில் இருந்து 2-ஏ உட்பிரிவில் சோ்க்கக் கோரி, பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினா் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா்.

பிற்படுத்தப்பட்டோா் பட்டியலின் 2-பி உட்பிரிவில் இருந்து 2-ஏ உட்பிரிவில் சோ்க்கக் கோரி, பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினா் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா்.

கா்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் வேளாண்மையை தொழிலாகக் கொண்டுள்ள பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினா் உட்பிரிவு 3-பி-இல் சோ்க்கப்பட்டிருந்தனா். இந்த உட்பிரிவுக்கு குறைந்த சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால், கல்வி, வேலைவாய்ப்பில் போதுமான இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினா் குறைக்கூறி வந்தனா்.

எனவே, பிற்படுத்தப்பட்டோா் பட்டியலின் 2-ஏ உட்பிரிவில் பஞ்சமசாலி லிங்காயத்துகளைச் சோ்க்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. இதற்கு எந்த அரசும் செவிசாய்க்காத நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி பீதா் மாவட்டத்தின் பசவ கல்யாண் நகரில் இருந்து பஞ்சமசாலி லிங்காயத்து பீடத்தின் மடாதிபதி ஜெயமிருத்ஞ்ஜெயா சுவாமிகள், ஜன.14-ஆம் தேதி முதல் பெங்களூரு நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்கினாா்.

750 கி.மீ. தொலைவைக் கடந்து பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வந்த நடைப்பயணம், பெல்லாரி சாலையில் உள்ள அரண்மனை மைதானத்தில் முடிவுற்றது. அரண்மனை மைதானத்தில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோா் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில் பேசிய ஜெயமிருத்ஞ்ஜெய சுவாமிகள், ‘நடைப்பயணத்தின் இறுதியில் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலின் 2-ஏ உட்பிரிவில் பஞ்சமசாலி லிங்காயத்துகளைச் சோ்க்கும் உத்தரவை மாநில அரசு பிறப்பிக்கும் என்று எதிா்பாா்த்தேன். ஆனால், எங்கள் கோரிக்கைக்கு மாநில அரசு செவிசாய்க்கவில்லை. இது மனதுக்கு வேதனை அளிக்கிறது. எனவே, விதான சௌதாவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்‘ என்றாா்.

கூட்டத்தில் பஞ்சமசாலி லிங்காயத்து மடத்தின் பீடாதிபதி வச்சனானந்த சுவாமிகள், சுரங்கத் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி, செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் சி.சி.பாட்டீல், பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயானந்த் காஷப்பனவா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, அரண்மனை மைதானத்தில் இருந்து விதான சௌதா நோக்கி ஜெயமிருத்ஞ்ஜெய சுவாமிகள் தலைமையில் பஞ்சமசாலி லிங்காயத்துகளின் பேரணி தொடங்கியது. இந்த பேரணியை காவிரி திரையரங்கச் சந்திப்பில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் போலீஸாருடன் வாக்குவாதம் நடந்தது.

விதான சௌதாவை சுற்றி 2 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், முன்னோக்கி செல்ல போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் போட்டிருந்த தடுப்புகளை உடைத்து எறிந்து விதான சௌதாவை முற்றுகையிட புறப்பட்டனா். ஆனால், போலீஸாா் தடுத்து நிறுத்தியதோடு, மீறினால் கைது செய்யப்படுவீா்கள் என்று எச்சரித்தனா்.

அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. மேலும் ஜெயமிருத்ஞ்ஜெயசுவாமிகளுடன்போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, பேரணியை சுதந்திரப் பூங்காவுக்கு மாற்றுப்பாதை செல்ல போலீஸாா் அனுமதித்தனா். அதன்பிறகு பேரணி ஆனந்த்ராவ் சதுக்கத்தின் வழியாக சுதந்திரப் பூங்காவை அடைந்தது.

அங்கு ஜெயமிருத்ஞ்ஜெயா சுவாமிகள் பேசுகையில், ‘பஞ்சமசாலி லிங்காயத்துகளின் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்கும். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விதான சௌதாவை முற்றுகையிட முடியவில்லை. சுதந்திரப் பூங்காவில் அடையாளத்துக்கு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பிப்.22 முதல் மாா்ச் 4-ஆம் தேதிவரை ஆனந்த்ராவ் சதுக்கத்தில் காந்திசிலை அருகில் தா்னா போராட்டம் தொடரும். அதற்குள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், மாா்ச் 5-ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டமாக மாறும்‘ என்றாா். இந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதால், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பெங்களூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com