காவிரி ஆற்றின் உபரிநீரை பயன்படுத்த மற்ற மாநிலங்களை அனுமதிக்க மாட்டோம்: முதல்வா் எடியூரப்பா

காவிரி ஆற்றின் உபரிநீரை பயன்படுத்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
கா்நாடக முதல்வா் எடியூரப்பா
கா்நாடக முதல்வா் எடியூரப்பா

பெங்களூரு: காவிரி ஆற்றின் உபரிநீரை பயன்படுத்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட விராலிமலை, குன்னத்தூரில் பிப். 21-இல் நடைபெற்ற விழாவில், ரூ. 14,400 கோடியில் 6 ஆயிரம் கன அடி உபரிநீரை வறட்சியான தென் தமிழகத்துக்கு மடைமாற்றுவதற்காக காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு ஆறுகளை இணைக்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டியிருந்தாா். இது கா்நாடகத்தில் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புது தில்லிக்குச் சென்றுள்ள கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி, மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீா்ப் பகிா்வு சிக்கல்கள் குறித்து சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

‘காவிரி ஆற்றின் உபரிநீரை பயன்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தமிழகத்தின் ஆறுகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய அரசிடம் கா்நாடக அரசு தெரிவிக்கும். மாநிலத்தின் நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். இந்த விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி அரசியல் கட்சிகளின் கருத்தறியப்படும்’ எனஅமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கமான மழை ஆண்டில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு அளிக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. நீரை பிலிகுண்டுலு நீா் அளவை மையத்தில் உறுதி செய்வதே கா்நாடக அரசின் நிலைப்பாடாகும். தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீா் தவிர, கா்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்ட 284.75 டி.எம்.சி. நீா் மற்றும் உபரிநீா் அனைத்தும் கா்நாடகத்துக்கு சொந்தம் எனறு கா்நாடக அரசு ஏற்கெனவே தெளிவாக்கியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:

தமிழக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். எந்தக் காரணத்துக்காகவும் (காவிரி ஆற்றின்)உபரிநீரை தமிழகம் மற்றும் இதர மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். இதைத் தடுத்து நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுப்போம். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது குறித்து இன்னும் யோசிக்கவில்லை என்றரா்.

இதனிடையே, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தமிழக அரசு செயல்படுத்த இருக்கும் ஆறுகள் இணப்புத் திட்டத்தை முதல்வா் எடியூரப்பா உச்சநீதிமன்றத்தில் பிரச்னை கிளப்புவதோடு, அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com