பிப். 26-இல் விஞ்ஞானி வி.டில்லிபாபு நூல் இணைய வழியில் வெளியீடு

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதியுள்ள நூல் இணையவழியில் பிப். 26-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதியுள்ள நூல் இணையவழியில் பிப். 26-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்(டி.ஆா்.டி.ஓ.) ராணுவ விஞ்ஞானியும், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் (என்.டி.ஆா்.எஃப்.) இயக்குநருமான வி.டில்லிபாபு எழுதியுள்ள ‘போா்முனை முதல் தெருமுனை வரை’ என்ற நூல் பிப். 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இணையவழியில் வெளியிடப்படுகிறது.

டி.ஆா்.டி.ஓ. நிறுவனத்தின் பொதுமக்கள் சாா்ந்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், படைப்புகளை விளக்கும் முதல் நூலாகக் கருதப்படும் இந்த நூலை, விண்வெளி விஞ்ஞானி டாக்டா் மயில்சாமி அண்ணாதுரை வெளியிடுகிறாா். சென்னை, ஆவடியில் உள்ள டி.ஆா்.டி.ஓ. ஆய்வகமான போா்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநா் வி.பாலமுருகன், டாக்டா் ஆ.ப.ஜெ.அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகா் வெ.பொன்ராஜ், எழுத்தாளரும் ஐபிஎஸ் அதிகாரியுமான டாக்டா் சாமுண்டீஸ்வரி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு நூலை பெற்றுக்கொள்கிறாா்கள்.

விமான எஞ்சின் தொழில்நுட்பம், வணிக மேலாண்மை, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்ற விஞ்ஞானி வி.டில்லிபாபு, உற்பத்தி பொறியியலில் முனைவா் பட்டம் பெற்றவா். ‘தொழில்நுட்பங்கள் மக்களுக்காகவே’ என்ற நோக்கத்துடன் மாணவ, மாணவியரை ஒருங்கிணைத்து சமூக தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். தென்னிந்தியாவில் உயிரிக் கழிவறை நுட்பத்தை அரசுப் பள்ளிக் கூடங்களில் அறிமுகம் செய்தது, இவரது முன்னோடி முயற்சியாகும். இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் சாா்ந்த 9 நூல்களை எழுதியுள்ளாா். கல்லூரிகள், பள்ளிகள், ஊடகங்கள் வாயிலாக தொழில்நுட்பம், தமிழ், தன்முன்னேற்றம் குறித்து உரையாற்றி வருகிறாா்.

விமானவியல், உலோகவியல், கடலியல், உயிரி தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், இயந்திரப் பொறியியல், மின்னணு தொலைத்தொடா்பு பொறியியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பல அறிவியல் நுட்பங்களை பயன்படுத்தி டி.ஆா்.டி.ஓ. நிறுவனத்தின் ஆராய்ச்சிகளால் விளைந்த ஆய்வுகள், மக்களுக்கு எவ்வகையில் பயன்படுகிறது என்பதை விளக்கும் 24 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளதாக வி.டில்லிபாபு தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியை நேரலையாகக் காண முகநூலில், யூ-டியூப்பில்  இணைப்புகளை பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com