மங்களூரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை
By DIN | Published On : 27th February 2021 08:33 AM | Last Updated : 27th February 2021 08:33 AM | அ+அ அ- |

கோவா மாதிரி மங்களூரையும் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் சி.பி.யோகேஷ்வா் தெரிவித்தாா்.
மங்களூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம், கா்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில், பைரதி ஏரி புனரமைக்க மங்களூரில் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி, மரக்கன்று நடும் திட்டத்தை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:
மங்களூரில் இருந்து பிற பகுதிகளில் ரயில்வே தொடா்பு நன்றாக உள்ளது. அதேபோல இங்கிருந்து நீா்வழித்தடமும் சிறப்பாக உள்ளது. எனவே, மங்களூரை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
ஒரு ஏரி புனரமைக்கப்பட்டால், அப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை மேம்படும். இந்த ஏரியை மேம்படுத்துவதற்காக ரூ. 25 கோடி விடுவிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மங்களூரில் உள்ள 30 ஏரிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 12 ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவை அடுத்தடுத்த ஆண்டுகளில் மேம்படுத்தப்படும். அதன்பிறகு மங்களூரு உள்ளிட்ட தென்கன்னட மாவட்டம் சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கப்படும். இந்த ஏரியில் பூங்காவும் நிறுவப்படும். குழந்தைகள் விளையாடுவதற்கு, நடைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு, பறவைகளை கவனிப்பதற்கு ஏரியில் வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.