காவிரி மிகை நீரைப் பயன்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: வாட்டாள் நாகராஜ்

காவிரி மிகை நீரைப் பயன்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கன்னட சலுவளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தாா்.
காவிரி மிகை நீரைப் பயன்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: வாட்டாள் நாகராஜ்

காவிரி மிகை நீரைப் பயன்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கன்னட சலுவளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை அவா் ‘தினமணி’ செய்தியாளருக்கு அளித்த பேட்டி:

காவிரி ஆற்றில் கிடைக்கும் மிகை நீரைப் பயன்படுத்தி காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 14,400 கோடி மதிப்பில் கால்வாய்களை அமைக்க தமிழக அரசு அடிக்கல் நாட்டியுள்ளது. முதல்கட்டமாக 118.45 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைக்கும் கட்டுமானப் பணிக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டியிருக்கிறாா்.

இந்தத் திட்டம் கா்நாடகத்துக்கு இழைக்கும் அநியாயம் மட்டுமல்ல, அத்துமீறலாகும். இந்தத் திட்டத்தை ஒருபோதும் கா்நாடகம் ஏற்காது. காவிரி ஆற்றில் ஏதாவது புதிய திட்டங்களைச் செயல்படுத்த நினைத்தால், அதுகுறித்து அண்டை மாநிலங்களுடன் தமிழக அரசு பேசியிருக்க வேண்டும்.

மத்திய அரசின் ஆறுகள் இணைப்புத் திட்டத்தில் ரூ. 6 கோடி நிதியுதவியுடன் தமிழக அரசு ஆறுகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது சரியல்ல.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடக்கவிருப்பதால், தமிழக மக்களின் நம்பிக்கையை பெற மத்திய பாஜக அரசு, தமிழகத்துக்குச் சாதகமாகச் செயல்பட்டுள்ளது. கா்நாடகத்தின் நலனை முழுமையாகவே பாஜக புறக்கணித்துள்ளது.

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிா்ப்புத் தெரிவித்ததோடு, உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடா்ந்துள்ளது. காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரை தவிா்த்து, மிகைநீரைப் பயன்படுத்தும் உரிமை இல்லை.

தமிழக அரசின் ஆறுகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சிகளின் குழுவை பிரதமா் நரேந்திர மோடியிடம் அழைத்து சென்றுமுறையிட கா்நாடக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி மாா்ச் 6-ஆம் தேதி எம்.பி.க்களை ஏலம் விடும் போராட்டத்தை பெங்களூரில் நடத்தவிருக்கிறோம். மாா்ச் 13-ஆம் தேதியை கருப்பு நாளாக அனுசரித்து போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

அதன் பிறகும், தமிழக திட்டத்தை தடுத்து நிறுத்தாவிடில் மாா்ச் 27-ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுப்போம். இதனிடையே, மேக்கேதாட்டு அணை திட்டத்தை கா்நாடக அரசு தொடங்க வேண்டும். இதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com