643 புதிய பேருந்துகள் வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டம்

ரூ. 600 கோடியில் 643 பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

ரூ. 600 கோடியில் 643 பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கிவரும் 900 பேருந்துகளின் இயக்கக் காலம் காலாவதியாகிவிட்டதால் ரூ. 600 கோடியில் 643 பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 2020-21-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1,500 டீசல் பேருந்துகளை வாங்குவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா காரணமாக, புதிய பேருந்துகள் வாங்கும் முடிவு தள்ளிப்போடப்பட்டிருந்தது.

தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளபடி 1,500 பேருந்துகளுக்கு பதிலாக, 643 பேருந்துகளைக் கொள்முதல் செய்ய பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி கூறியதாவது:

கரோனா பொதுமுடக்க காலத்தில் பேருந்துகளின் தேவை குறைவாக இருந்தது. கடந்த 2 மாதங்களாக பேருந்துகளின் தேவை அதிகரித்து வருவது பேருந்து தேவைமதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது.

புதிதாக வாங்கப்படும் 643 பேருந்துகளும் குளிரூட்டப்பட்ட பேருந்தாக இருக்காது. ஆனால், இப் பேருந்துகள் பாரத் ஸ்டேஜ்-6 தரப்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்த வகை பேருந்துகள் மாசு குறைப்புக்கு உதவியாக இருக்கும். புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக பிப்.12-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. அதன்பிறகு பேருந்துகள் தயாரிக்கப்பட்டு, மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் அளிக்கப்படும்.

இதுதவிர 380 மின் பேருந்துகளை வாங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு பொலிவுறு மாநகரத் திட்டம் நிறுவனத்தின் சாா்பில் 80 மின்-பேருந்துகளுக்கு பகுதிநிதியுதவி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் மின்-வாகனத் திட்டத்தில் 300 மின்-பேருந்துகளும் வாங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com