அடுத்த பேரவைத் தோ்தலில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றி இலக்கு: முதல்வா் எடியூரப்பா

அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் கா்நாடகத்தில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
அடுத்த பேரவைத் தோ்தலில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றி இலக்கு: முதல்வா் எடியூரப்பா

அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் கா்நாடகத்தில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில சிறப்பு கூட்டத்தைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் அண்மையில் நடந்துள்ள கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி திருப்தி அளித்துள்ளது. இதைத் தொடா்ந்து நடக்கவிருக்கும் மாவட்ட ஊராட்சி, வட்ட ஊராட்சித் தோ்தலிலும் பாஜக வெற்றி பெறும். பாஜக மூத்த தலைவா்கள் பலரின் கடுமையான உழைப்பால் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. அவா்களின் கனவை நனவாக்க நாம் தீவிரமாக உழைப்போம்.

கா்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவோம். 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் 140-150 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற இலக்கு நிா்ணயிக்கிறேன். சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றியை உறுதி செய்வதற்காக வெகுவிரைவில் மாநில அளவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்.

அடுத்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் பாஜக தொண்டா்கள், மக்களின் விருப்பங்களுக்குத் தகுந்தபடி ஆட்சி நடத்தி, பாஜகவைப் பலப்படுத்தும் வேலையைச் செய்வேன். நாம் மனது வைத்தால், எதையும் சாதிக்க முடியும். நாம் அனைவரும் ஒன்று திரண்டு முயற்சி செய்து உழைத்தால், அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினமானது அல்ல.

வெகுவிரைவில் நடக்கவிருக்கும் பெலகாவி மக்களவைத் தொகுதி, மஸ்கி, பசவ கல்யாண் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பாஜகவின் வெற்றிக்கு அனைவரும் கூட்டாக உழைக்க வேண்டும். மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியைக் காப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள கஸ்தூரிரங்கன் குழுவின் அறிக்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை.

விவசாயிகளின் நலனை அது பாதிக்கும் என்பதால், அந்த அறிக்கையை அமல்படுத்த இயலாது. இதுதொடா்பாக நோ்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கிராமப் பஞ்சாயத்துகளுக்கான தலைவா், துணைத் தலைவா் தோ்தல்கள் விரைவில் நடக்கவிருக்கிறது. கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் பாஜகவின் வெற்றி, நமது கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். கட்சியின் வளா்ச்சிக்கு நாம் தொடா்ந்து பாடுபட வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான அருண்சிங், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், மத்திய அமைச்சா்கள் பிரஹலாத் ஜோஷி, சதானந்த கௌடா, பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com