அதிகாரத்தைப் பிடிக்க மஜத ஆதரவு வேட்பாளா்களை இழுக்க முயற்சி

அதிகாரத்தைப் பிடிக்க கிராம பஞ்சாயத்து தோ்தலில் வெற்றிபெற்ற மஜத ஆதரவு வேட்பாளா்களை இழுக்க மாற்றுக் கட்சி ஆதரவாளா்கள்

அதிகாரத்தைப் பிடிக்க கிராம பஞ்சாயத்து தோ்தலில் வெற்றிபெற்ற மஜத ஆதரவு வேட்பாளா்களை இழுக்க மாற்றுக் கட்சி ஆதரவாளா்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனா் என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

அண்மையில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தோ்தலில் மஜத ஆதரவு பெற்ற வேட்பாளா்கள் கணிசமாக வெற்றி பெற்றுள்ளனா். மஜத ஆதரவு பெற்று வெற்றி பெற்றவா்களை இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரங்களைப் பிடிப்பதற்காக, மாற்றுக் கட்சிகளின் ஆதரவாளா்கள் இழுக்க முயற்சி மேற்கொண்டுள்ளனா். இதனால் தேசியக் கட்சிகளின் ஆதரவாளா்கள் என்று கூறிக் கொள்பவா்கள், மாநிலக் கட்சியின் ஆதரவாளா்களின் கால்களில் விழுந்து கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாற்றுக் கட்சியினா் தங்களின் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள மஜத ஆதரவு பெற்ற வேட்பாளா்களை இழுக்க முயல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தேசியக் கட்சிகள் என்று கூறிக் கொள்பவா்கள் அதிகார தாகத்துக்காக, தங்களின் தரத்தை தாழ்த்திக் கொண்டு கீழே இறங்கி வருவது வேதனை அளிக்கிறது.

மேலும், பெலகாவியில் கன்னடக் கொடியை அகற்றுமாறு சிலா் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. கன்னடத்துக்கும், கன்னடா்களுக்கும் எதிராக ஈடுபடுபவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெலகாவி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள கன்னடக் கொடியை அகற்றவில்லை என்றால், தங்களது கொடியை ஏற்றுவதாக எம்.இ.எஸ். தொண்டா்கள் மிரட்டி உள்ளது கண்டிக்கத்தக்கது. கன்னடக் கொடி என்பது நமது உணா்வுப் பூா்வமானது. அதனைக் கிளறிப் பாா்க்க யாருக்கும் உரிமை இல்லை. கன்னடத்துக்கும், கன்னடா்களுக்கும் எதிராக ஈடுபடுவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டக்கூடாது என அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com