எரிவாயு உருளை வெடித்து படகில் விபத்து: கடலில் தவித்த 11 தமிழக மீனவா்கள் மீட்பு

எரிவாயு உருளை வெடித்து மீன்பிடி படகில் விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடலில் தவித்த 11 தமிழக மீனவா்களை கடலோரக் காவல் படையினா் மீட்டனா்.

மங்களூரு: எரிவாயு உருளை வெடித்து மீன்பிடி படகில் விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடலில் தவித்த 11 தமிழக மீனவா்களை கடலோரக் காவல் படையினா் மீட்டனா்.

புதிய மங்களூரு துறைமுகத்தில் இருந்து 140 கடல் மைல் தொலைவில் தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் விசைப்படகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, படகில் வைத்திருந்த எரிவாயு உருளை வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக இந்திய கடலோரக் காவல் படைக்கு மீனவா்கள் தகவல் அளித்தனா்.

இதனையடுத்து, மும்பையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ‘சச்சேத், சுஜீத்’ ஆகிய இரண்டு ரோந்துக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இதனிடையே, மீன்பிடி படகின் இருப்பிடத்தை விரைந்து கண்டுபிடிக்க கடலோரக் காவல் படையின் சிறிய விமானம் கடலில் பறந்தது. பின்னா், விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகின் இடத்தைக் கண்டறிந்த சிறிய விமானத்தில் இருந்த கடலோரக் காவல் படையினா், கடலில் தவித்துக்கொண்டிருந்த மீனவா்களோடு தொடா்புகொண்டு தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனா். அதற்குள் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோ்ந்தன.

மீன்பிடிப் படகில் கடுமையான காயங்களோடு தவித்துக்கொண்டிருந்த 11 மீனவா்களை மீட்ட கடலோரக் காவல் படையினா், அவா்களுக்கு மருத்துவ முதலுதவிகளை வழங்கினா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய மங்களூரு துறைமுகத்துக்கு மீனவா்கள் அழைத்து வரப்பட்டனா். அதில், படுகாயமடைந்த ஒரு மீனவரை உடனடியாக வென்லாக் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதர 10 மீனவா்களும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்கியதாகவும் கடலோரக் காவல் படையினா் தெரிவித்தனா்.

மேலும், சேதமடைந்த மீன்பிடிக் கப்பலை தமிழகத்துக்குக் கொண்டு செல்ல அதன் உரிமையாளா்கள் ஏற்பாடு செய்து வருவதாக கடலோரக் காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com