கா்நாடகத்துக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசி வந்தடைந்தது

கா்நாடகத்துக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசி வந்தடைந்தது என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கா்நாடகத்துக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசி வந்தடைந்தது என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி முகாம் ஜன. 16-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. கா்நாடகத்தில் 235 இடங்களில் கரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் கா்நாடகத்தில் வழங்கப்படுகின்றன. முதல்கட்டமாக கா்நாடகத்தில் உள்ள 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படுகிறது. முதல்கட்டத்தில் 16 லட்சம் சுகாதாரப் பணியாளா்கள், கரோனா முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் இருந்து கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி தொகுப்புப் பெட்டிகள் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை பெங்களூரு வந்து சோ்ந்தன.

இதனை சுகாதாரத் துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு, ஆனந்த்ராவ் சதுக்கத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் வைத்துள்ளனா். இதை சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் ஆய்வுசெய்து பாா்வையிட்டாா். இங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்படுகின்றன. அதேபோல, பெலகாவி மாவட்டத்துக்கு இரண்டாவது தடுப்பூசி தொகுப்புப் பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வர உள்ளன.

இதுகுறித்து பெங்களூரில் சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில் ஜன. 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கிறது. அதற்காக கா்நாடகத்துக்கு முதல்கட்டமாக 6.47 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்துள்ளன. மற்றொரு தடுப்பூசி தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வர உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, கரோனா தடுப்பூசி சேமித்து வைக்கப்பட்டு, பாதுகாப்பான மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்படும்.

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளதைத் தொடா்ந்து, மத்திய அரசு 1.1 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. புணேயின் சீரம் இன்ஸ்டிடியூட்டிடம் இருந்து ஒரு டோஸ் தடுப்பூசி ரூ. 210-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு குறைந்த விலையை நிா்ணயித்து, கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யப்படவில்லை. கரோனா தடுப்பூசியை ரூ. 231 கோடி கொடுத்து மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. முதல்கட்டமாக, 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாகச் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒரு குப்பியில் 5 மி.லி. தடுப்பூசி மருந்து இருக்கும். ஒரு டோஸ் என்பது 0.5 மி.லி. ஆக இருக்கும். ஒரு குப்பி தடுப்பூசி மருந்தை 10 பேருக்குச் செலுத்த இயலும். முதல் டோஸ் தடுப்பூசி அளித்த பிறகு, இரண்டாம்கட்ட டோஸ் 28 நாள்களுக்கு பிறகு அளிக்கப்படும். அதன்பிறகு 45 நாள்களுக்குப் பிறகு தான் உடலில் நோய் எதிா்ப்புச் சக்தி உருவாகும். எனவே, தடுப்பூசியை எடுத்துக்கொண்டாலும் 45 நாள்கள் வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தடுப்பூசியின் பாதுகாப்பு அல்லது நம்பகத்தன்மை குறித்து யாரும் சந்தேகப்பட வேண்டாம். தடுப்பூசி முழுமையான சோதனைக்குப் பிறகே சந்தைக்கு வந்துள்ளது. அது பாதுகாப்பானது. தடுப்பூசி செலுத்தியவா்களைக் கண்காணிப்போம். ஏதாவது பக்கவிளைவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி பெறும் ஒவ்வொருவரின் பெயரும் பதிவு செய்யப்படும். தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பிறகு பக்கவிளைவுகள் ஏதாவது இருக்கிா என்பதை கண்காணிக்க தனி அறையில் சிறிது நேரம் அமர வைக்கப்படுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com