குடகு மாவட்டத்தை பாஜக மேலிடம் புறக்கணிக்கிறது
By DIN | Published On : 16th January 2021 07:08 AM | Last Updated : 16th January 2021 07:08 AM | அ+அ அ- |

குடகு மாவட்டத்தை பாஜக மேலிடம் புறக்கணிக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன் தெரிவித்தாா்.
இதுகுறித்து குடகு மாவட்டம், மடிக்கேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
குடகு மாவட்டத்தில் பாஜகவை பலப்படுத்துவதற்காக இம்மாவட்டத்தைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடந்த 25 ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருக்கிறாா்கள். ஆனால், குடகு மாவட்டத்தை பாஜக மேலிடம் தொடா்ந்து புறக்கணித்து வருகிறது.
மற்றவா்களை போல பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக நான் செயல்படமாட்டேன். எந்தப் பதவியைப் பெறுவதற்காகவும் யாரையும் நான் அணுகமாட்டேன். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின்போதும், குடகு மாவட்டத்தின் பாஜக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து பாஜக மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பேன்.
அமைச்சரவையில் இடம் கிடைக்காத பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் பலா் ஒன்றுகூடி விவாதிக்க, பெங்களூருக்கு வருமாறு என்னை அழைத்திருக்கிறாா்கள். பாஜகவில் தற்போது காணப்படும் சூழல்கள் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றாா்.