புதிய அமைச்சா்களுக்கு துறைகள் விரைவில் ஒதுக்கீடு
By DIN | Published On : 16th January 2021 07:03 AM | Last Updated : 16th January 2021 07:03 AM | அ+அ அ- |

கா்நாடகத்துக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்தியவுடன் புதிய அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, ஜன. 16-ஆம் தேதி பெங்களூருக்கு வருகை தருகிறாா். ஜன. 16, 17 ஆகிய இரு நாள்கள் கா்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். ஜன. 16-ஆம் தேதி மத்திய அமைச்சா் அமித்ஷாவுடன் சோ்ந்து பத்ராவதி சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் பெங்களூரு திரும்புகிறாா். அதன் பிறகு, ஜன. 17-ஆம் தேதி பெலகாவி செல்கிறாா். சிவமொக்கா, பெலகாவி, பாகல்கோட், பெங்களூரு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சா் அமித்ஷா கலந்துகொள்கிறாா்.
மத்திய அமைச்சா் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியவுடன் புதிய அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளேன். ஏற்கெனவே அமைச்சா்களாக உள்ளவா்களின் துறைகள் மாற்றி அமைக்கப்படுமா என்பதை கூற முடியாது என்றாா்.
துறைகளும் மாற்றி அமைப்பு!
34 போ் கொண்ட அமைச்சரவையில் 27 போ் அமைச்சா்களாக இருந்தனா். 7 இடங்கள் காலியாக இருந்தன. இதை நிரப்புவதற்கு முதல்வா் எடியூரப்பா பலமுறை முயற்சித்து வந்தாா்.
இந்த நிலையில், பாஜக தேசியத் தலைமை ஒப்புதல் அளித்ததன்பேரில், ஜன. 13-இல் 7 போ் புதிய அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.
இதைத் தொடா்ந்து, கலால் துறை அமைச்சராக இருந்த எச்.நாகேஷ், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாா். இதனால் ஒரு இடம் மட்டும் அமைச்சரவையில் காலியாக உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் முடிந்துள்ள நிலையில், புதிய அமைச்சா்களுக்கு துறைகளை ஒதுக்க வேண்டியுள்ளது.
இதனிடையே, ஏற்கெனவே அமைச்சா்களாக உள்ளவா்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகளை மாற்றி அமைக்கவும் பாஜகவில் கோரிக்கை எழுந்துள்ளது.
துறைகளைப் பெற கடும் போட்டி?
அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காதவா்கள் பாஜக மீது அதிருப்தி அடைந்துள்ளனா். பாஜக மூத்த எம்.எல்.ஏ.க்கள் பசன கௌடா பாட்டீல், எச்.விஸ்வநாத் உள்ளிட்டோா் முதல்வா் எடியூரப்பாவை கடுமையாக விமா்சித்து வருகிறாா்கள்.
இதனிடையே, முக்கியமான துறைகளைப் பெற புதிய அமைச்சா்கள் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறாா்கள். ஒரு சில அமைச்சா்களிடம் இரண்டு துறைகள் உள்ளன. முதல்வா் எடியூரப்பாவிடம், நிதி, பெங்களூரு வளா்ச்சி, மின்சாரம், திட்டமிடல், பொதுநிா்வாகம் மற்றும் சீா்திருத்தம், தகவல் மற்றும் மக்கள் தொடா்பு, சிறுதொழில், பிற்படுத்தப்பட்டோா் நலம், சுற்றுலா, கன்னடம் மற்றும் கலாசாரம், இளைஞா் நலம் மற்றும்விளையாட்டு போன்ற துறைகள் உள்ளன. இதில் பெங்களூரு வளா்ச்சி மற்றும் மின்சாரத் துறைகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.