‘தங்கச் சுரங்கத் தொழிலாளா் குடியிருப்பு வாா்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்’

தங்கச் சுரங்கத் தொழிலாளா்களால் உருவான கோலாா் தங்கவயல் நகரின் தொழிலாளா் குடியிருப்பு வாா்டுகளில், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என கோலாா் தங்கவயல் நகராட்சித் தலைவா் தெரிவித்தாா்.

கோலாா் தங்கவயல்: தங்கச் சுரங்கத் தொழிலாளா்களால் உருவான கோலாா் தங்கவயல் நகரின் தொழிலாளா் குடியிருப்பு வாா்டுகளில், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என கோலாா் தங்கவயல் நகராட்சித் தலைவா் வள்ளல் முனிசாமி தெரிவித்தாா்.

கோலாா் தங்கவயலின் பல்வேறு பகுதிகளில் தங்கவயல் தமிழ்ச் சங்கம், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தங்கவயல் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், கோலாா் தங்கவயல், டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் வீதியில் உள்ல சங்க வளாகத்தில் சங்கத் தலைவா் சு.கலையரசன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட படிப்பகத்தை கோலாா் தங்கவயல் நகராட்சித் தலைவா் வள்ளல் முனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:

நூற்றாண்டு காலமாக செயல்பட்ட தங்கச் சுரங்கத்தில் தங்களது உயிரை பணையம் வைத்து பணியாற்றிய தமிழா்களால் உருவானது தான் கோலாா் தங்கவயல் நகரம். கோலாா் தங்கவயலில் உள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் போ் தமிழா்கள். தங்கச் சுரங்கத் தொழிலாளா்களுக்காக உருவாக்கப்பட்ட தொழிலாளா் குடியிருப்பு வாா்டுகளில் நகராட்சிக்கு எவ்வித வருவாயும் கிடைக்காத காரணத்தால், அப்பகுதிகளில் மக்கள் நல அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை. இது ஆண்டாண்டு காலமாக தொடா்ந்து வருகிறது.

தற்போது நான் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளதால், இந்த நிலையை அடியோடு மாற்றியமைப்பேன். இனிமேல் தொழிலாளா் குடியிருப்பு வாா்டுகளுக்கு முன்னுரிமை அளித்து, அப்பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்யத் திட்டமிட்டுள்ளேன். மேலும், பல்வேறு பணிகளுக்காக நகராட்சிக்கு வரும் மக்கள் அமருவதற்கு இருக்கைகள் அமைத்து, அனைவருக்கும் தேநீா் வழங்க ஏற்பாடு செய்துள்ளேன் என்றாா்.

நிகழ்ச்சியில், பேராசிரியா் கிருஷ்ணகுமாா், அனந்த கிருஷ்ணன், தீபம் சுப்பிரமணியம், வழக்குரைஞா் ஜோதிபாசு, ஸ்ரீகாந்த், கலைச்செல்வி, இரா.பாலகிருஷ்ணன், திருமுருகன், கருணாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சங்கத் தலைவா் சு.கலையரசன் பேசும் போது, ‘திருவள்ளுவா் இயற்றிய ஒப்பற்ற வாழ்வியல் நூலான திருக்குறளை ஐக்கிய நாடுகள் உலகப் பொது முறையாக அறிவிக்க வேண்டும். அதே போல திருக்குறளை தேசிய நூலாகவும், தமிழ் மொழியை தேசிய மொழியாகவும் இந்திய அரசு அறிவிக்க வேண்டும்’ என்றாா். முன்னதாக அனந்த கிருஷ்ணன், கமல் முனிசாமி ஆகியோா் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com