கா்நாடகத்தில் ஜன. 18 முதல் பசுவதை தடைச்சட்டம் அமல்

கா்நாடகத்தில் ஜன. 18-ஆம் தேதி முதல் பசுவதை தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான் தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் ஜன. 18-ஆம் தேதி முதல் பசுவதை தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக கால்நடை வதை தடை மற்றும் பாதுகாப்புச் சட்டம், இம்மாதத்தின் தொடக்கத்தில் அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இச்சட்டத்தை அமல்படுத்த அதிகாரப்பூா்வமான அறிவிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ஜன. 18-ஆம் தேதி முதல் பசுவதை தடைச்சட்டம் அமல்படுத்தப்படும். பசுவதை தடைச் சட்டத்துக்கான விதிகள் வெகுவிரைவில் வகுக்கப்படும். வேளாண் பணிகளுக்காக கால்நடைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்ல தடையில்லை. எனவே, இதை யாரும் குழப்பிக்கொள்ளக் கூடாது.

கா்நாடகத்தில் கால்நடைகள் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் கால்நடை நலவாரியம் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுமாறு காவல் துறைக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. காவல் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு பசு உள்ளிட்ட கால்நடைகளை வதை செய்யப்படுவதில் இருந்து காக்க வேண்டும்.

பசுவதை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தால், உடனடியாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம். யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுத்து பசுக்களை காப்பாற்ற வேண்டும். கால்நடை பராமரிப்பு மையங்களை அமைக்க கா்நாடக அரசு தயாராகி வருகிறது. முதல்வா் எடியூரப்பாவுடன் கலந்தாலோசித்த பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com